கொலை களமாகும் நெல்லை-இன்றும் 2 கொலைகள்!
திருநெல்வேலி:நெல்லையில் இன்று இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கீழப்பாட்டம், பாளை, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது முன்விரோதம் காரணமாகவும், பழிக்கு பழியாகவும் பல கொலைகள் நடந்தன. கீழப்பாட்டம் கிராமத்தில் மட்டும் 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இதே போல் செட்டிகுளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜோசப் மற்றும் கல்லூரி மாணவன் ஜான்சன் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் தச்சநல்லூர் அழகனேரியைச் சேர்ந்த குமார், கண்ணன் ஆகியோர் கீழப்பாட்டம் கொலையில் கூலிப்படையாக செயல்பட்டதற்காக படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்கு உச்சகட்டமாக தென்காசியில் கடந்த 14-ந் தேதி நடந்த முன் விரோத மோதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு நடந்த பல கொலைகள் நெல்லை மாவட்டத்தை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இன்று காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டியில் இரட்டைக் கொலை நடந்துள்ளது.
காமராஜர் நகரை சேர்ந்த முத்துமாலை மகன் பரமசிவன், அதே பகுதியை சேர்ந்த ராசையா மகன் பரமானந்தம். இவர்கள் இருவருக்கும் அருகருகே வயல் உள்ளது. இதில் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக வரப்புத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை பரமசிவனும், பரமானந்தமும் தங்களது வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தனர், அப்போது அவர்களுக்குள் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரமானந்தம் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பரசிவனை வெட்ட துரத்தி சென்றார்.
ஓட முடியாமல் தவித்த பரமசிவன் அங்குள்ள சுடலை கோவில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றார். விரட்டிச் சென்ற பரமானந்தமும் சுவர் ஏறிக் குதித்து அங்கு அவர் பரசிவனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார். அப்போது சுதாரித்து கொண்ட அவர் பரமானந்தத்திடமிருந்து அரிவாளை பிடுங்கி அவரை மாறி மாறி சரமாரியாக வெட்டினார்.
இதில் நிலைகுலைந்த பரமானந்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மறுபக்கம் வெட்டுப்பட்ட பரமசிவனும், சிறிது நேரத்தில் கோவிலின் பீடம் அருகே விழுந்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications