எப்ஐஆர்-இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு தலைமறைவு
மதுரை:மதுரையில் எப்.ஐ.ஆர் திருத்திய வழக்கில் இன்ஸ்பெக்டர், பெண் எஸ்.ஐ, ஏட்டு ஆகியோர் திடீரென தலைமறைவாகி, முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வக்கீல் சங்கர நாராயணன். இவர் கடந்த 2005ம் ஆண்டு இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கர நாராயணன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அண்ணாநகர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் தலைமைக் காவலர் ராஜசேகர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பான எப்ஐஆரில் திருத்தம் செய்து போலியாக கையெழுத்துப் போட்டு சங்கரநாராயணன் மீது நடவடிக்கை எடுத்ததற்காக வக்கீல்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உட்பட 3பேரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் எப்ஐஆரில் திருத்தம் செய்த இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதனால் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி குலோத்துங்க பாண்டியன் தலைமையில் சாரணை நடத்தப்பட்டு, கடந்த வாரம் மதுரை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, ஏட்டு ராஜசேகர் ஆகியோர் குற்றவாளிகள் என்று குறிப்ப்பிடப்பட்டிருந்தது. அது தவிர 34 அரசு சாட்சிகளும் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குற்றவாளிகள் மூவரும் கடந்த 17ம் தேதி முன் ஜாமீன் கேட்டு மதுரை 6வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க வக்கீல்கள் சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் மாஜிஸ்திரேட்டு ராஜேந்திரக்கண்ணன் மறுநாள் (18ம் தேதி) மாரிமுத்து, மீனாம்பிகையை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, முன் ஜாமீன் தொடர்பான வழக்கையும் மறுநாள் விசாரணைக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 18ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் ஏட்டு ராஜசேகர் உட்பட 3 பேரையும் கைது செய்து வரும் 27ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் ராஜேந்திரகண்ணன் உத்தரவிட்டார்.கோர்ட்டில் ஆஜராகாத அவர்கள் மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை கட்டுப்பாட்டு பிரிவில் வேலைபார்த்து வந்த இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவும், மதுரை நகர மகளிர் காவல் நிலையத்தில் எஸ்ஐ யாக பணிபுரிந்த மீனாம்பிகையும் விடுப்பில் சென்றுவிட்டனராம். ஏட்டு ராஜசேகரும் தலைமறைவாக இருக்கிறார்.
சிபிசிஐடி போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர்கள் இருவரும் தங்கள் தரப்பு வக்கீல்களை வைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனராம்.
இதற்கான பணிகளை அவரது வக்கீல்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள். இதற்கிடையில் இவர்கள் இருவரும் வெளிமாவட்டங்களில் தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் வந்துள்ளதால் சென்னை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அவர்கள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications