ராமதாஸ் யோசனையை ஏற்றால்.. நடுத்தெரு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:டாக்டர் ராமாதாசின் யோசனையை ஏற்றால், கேபிள் டிவி இணைப்பு வழங்கும் பணியில் இரண்டு லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி- ஆந்திர மாநிலத் தலைநகரில் 2 இடங்களில் குண்டு வெடித்து 50க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்களே?

பதில்- ஹைதராபாத்தில் காட்சிக் கூடங்களிலும், பூங்காக்களிலும் வெடிக்கப்பட்டகுண்டுகளின் காரணமாக ரத்த ஆறு ஓடுவதை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பார்க்கும் போது நம் கண்களிலே குருதி அருவி கொட்டுகிறது. ஆந்திர மாநில மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள இந்த துயரத்தில் தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் பங்கு கொள்ள கடமைப்பட்டிருக்கிறது. ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியோடும், ஆந்திர மாநில சகோதரர்களோடும் இணைந்து- இந்த கொடிய நிகழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள நெடிய துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

கேள்வி- கூடிய சீக்கிரம் மலர இருக்கும் அதிமுக ஆட்சியில் கேபிள் டி.வி. சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பது பற்றி?

பதில்- அவரது மொழியிலேயே அவருக்கு பதில் கூற வேண்டுமென்றால் இது ஒரு நல்ல ஜோக். தப்பித் தவறி மீண்டும் அதிமுக ஆட்சி ஏற்பட்டால், கேபிள் டி.வி சட்டம் மட்டுமல்ல, மதமாற்ற தடை சட்டம், வேலை நியமனத்தடை சட்டம், அரசு அலுவலர் மற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் ரத்து, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை ரத்து, திருமண உதவித் திட்டம் ரத்து, கல்விக் கட்டணம் உயர்வு போன்ற பல முடிவுகளையும் மீண்டும் செயல்படுத்துவார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள். எனவே அந்த நிலைமை வராமல் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

கேள்வி- பாமக நிறுவனர் தமிழக அரசு நடத்தும் கேபிள் டி.வி பற்றி வரவேற்பு தெரிவித்து விட்டு சில யோசனைகளையும் தெரிவித்திருக்கிறாரே?

பதில்- திமுக ஆட்சியில் எந்த திட்டங்கள் ஆனாலும், மக்கள் பிரச்சினையானாலும் அவற்றை அறிவித்து நிறைவேற்ற தொடங்குகிற போது இந்த ஓராண்டு காலத்தில் பல தடங்கல்களையும், இடையூறுகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. அவற்றையெல்லாம் சமாளித்து அலட்சியப்படுத்தாமல் அதற்கான விளக்கங்களையும் வழங்கி வருவதோடு, மக்களுக்கு தேவையான வசதிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில்தான் கேபிள் டி.வி. பற்றி நீண்ட காலமாக இருந்து வருகின்ற சிந்தனையை செயல்படுத்த எண்ணியபோது, டாக்டர் ராமதாசின் அறிக்கையும் வெளிவந்தது. அரசே கேபிள் டி.வியை நடத்த வேண்டுமென்றும், அதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதையும் அரசு பரிசீலித்து கேபிள் டி.வியை அரசுடமை ஆக்குவதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதாலும், அரசுடமை ஆக்குவதற்கு மாநில அரசின் சட்டத்திலே இடம் இல்லை என்பதாலும், மத்திய அரசுதான் அதற்கு அதிகாரம் படைத்தது என்பதாலும் கேபிள் டி.வியை அரசுடமையாக்கி நடத்துவதற்கு மாறாக அரசு கேபிள்டி.வியை நடத்தலாம் என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டது போல, அதனால் அரசின் வருமானத்தையும் பெருக்கலாம் என்று திட்டமிட்டு மாநில அரசும் கேபிள் டி.வி. நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பினையொட்டி டாக்டர் ராமதாஸ் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அதில் ஏற்கத்தக்கவையும், ஏற்க இயலாதவையும் உண்டு.

உதாரணமாக, அவரது கடிதத்தில், இப்போது வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒழுங்கான இணைப்பு எண்ணிக்கையை கொடுக்கவில்லை என்று பரவலாக ஒரு புகார் இருந்து வருகிறது.

இதற்கு எம்.எஸ்.ஓ. என்றழைக்கப்படும் பல்நோக்குச் சேவை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம், கட்டணத் தொலைக்காட்சிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தா மற்றும் வரி எனப்பல காரணங்கள் கூறப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டுவதால் அரசுக்கு வரி இழப்பும், பொது மக்களுக்கு சீரான கட்டணம் இன்மையும் இருந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் எம்.எஸ்.ஓ. என்ற முறையில் மட்டுமே செயல்பட்டு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணியை கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களுக்கே வழங்கினால் என்ன நடக்கும்? என்று டாக்டர் ராமதாஸ் கேட்டு விட்டு அவரே மேலும் அவரது அறிக்கையில் அதைப்பற்றி கூறுகிறார்.

"வீடுகளுக்கு புதியவர்கள் நேரடியாக கேபிள் டி.வி. இணைப்பு வழங்கி கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் உண்மையான எண்ணிக்கையைத் தெரிவிக்காத நிலைமை தொடரும். இதனால், அரசுக்கு வரி இழப்பும், சந்தா இழப்பும் ஏற்படும். அரசு நிறுவனம் லாபத்தை பார்க்கவே முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

வாடிக்கையாளர்களுக்குச் சீரான கட்டணமின்மை என்ற தற்போதைய நிலைமை தொடரும். ஏனெனில் கேபிள் டி.வி. இணைப்பு வழங்குபவர்கள் வழக்கம்போல பாகுபாடாக கட்டணத்தை வசூலித்து வருவார்கள். அதிக கட்டணத்தையும் வசூலிக்க இடமிருக்கிறது. படித்த இளைஞர்களோ, தொழில் முனைவோரோ புதிதாக கேபிள் டி.வி. தொழிலில் இறங்க முடியாத நிலைமை ஏற்படும்.

ஏனெனில் இத்தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களுக்குஅரசுடனும் கூட்டு ஏற்பட்டு விடுவதால் அவர்களுக்கு அரசே பாதுகாப்பு வழங்குகிறது என்ற தோற்றம் உருவாகி விடும். இதனால் புதியவர்களை நுழைய அனுமதிக்கமாட்டார்கள். இந்த குறைகள் எல்லாம் போக வேண்டுமேயானால் வீடுகளுக்கு நேரடியாக கேபிள் டி.வி. இணைப்பு வழங்குபவர்கள் என்ற பெயரில் அரசு எந்த தனி நபரிடமும் கூட்டு வைக்கக்கூடாது என்றெல்லாம் டாக்டர் அவருடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அவரது இந்த யோசனையை ஏற்றால், தற்போது அந்தப் பணியிலே ஈடுபட்டுள்ள இரண்டு லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே கேபிள் இணைப்பு பணியிலே ஈடுபட்டுள்ளவர்கள் அதிலே அவர்கள் செய்துள்ள முதலீட்டினையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, அரசின் திட்டத்தினை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்துகின்ற நிலை ஏற்பட்டு விடும்.

அது மாத்திரமல்ல, டாக்டர் தெரிவித்திருப்பது போல் வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பவர்கள் தங்கள் விருப்பம்போல் பாகுபாடாக பொதுமக்களிடம் கட்டணத்தை வசூலிக்க இடம் கொடுக்கப்பட மாட்டாது. முன்கூட்டியே அரசின் சார்பில் இவ்வளவுதான் கட்டணம் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு விடும். இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால், புதியதாக இந்த தொழில் செய்ய விரும்புவோருக்கு எந்தத் தடையும் இல்லை.

இந்த தொழில் பற்றி நன்கறிந்தவர்களுடன் எல்லாம் இரண்டு மூன்று முறை விவாதித்துத்தான் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் பேட்டியிலும், கடிதத்திலும் எழுதியுள்ள மற்ற யோசனைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு மேற்கொள்ளப்படும்.

அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவு அரசின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதல்ல. அரசுக்கு ஓரளவு வருவாயையும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு சீரான கட்டணத்தில் தரமான சேவையையும் அளிப்பதைத்தான் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி- ஒரு நாளேட்டில் டைட்டானியம் தொழிற்சாலை பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளதே?

பதில்: இன்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட் என்ற ஆங்கில இதழின் ஆசிரியரான எஸ்.விஸ்வநாதன் ஆய்வு செய்து அந்த கட்டுரையை எழுதியுள்ளார். உவர் நிலங்கள் விளை நிலங்களாகும் வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில் டாடா அமைப்பும் டைட்டானியம் தொழிற்சாலை ஏன் வேண்டும்? என்றும் டாடாடைட்டானியம் தொழிற்சாலையினால் வரும் நன்மைகள் என்ன? என்றும் எழுதியிருக்கிறார்.

அதில் உள்ள ஒரு சில கருத்துகள் பற்றி நமக்கு மாற்று கருத்துகள் உண்டெனினும் இந்த தொழிற்சாலை பற்றி அவர் எழுதியுள்ள கருத்துகள் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+