சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு: சட்டசபையைகூட்ட ராமதாஸ் கோரிக்கை
திருச்சி:கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் நடந்த பாமக வாழுரிமை மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில்,
கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என நீதிபதி ஜனார்த்தனம் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இந்த கமிட்டியின் பரிந்துரைகளை எந்தவித சட்ட இடையூறும் இல்லாமல் அமல்படுத்த தமிழக அரசு முயல வேண்டும். இதற்காக சட்டசபையைக் கூட்டி சிறப்பு விவாதம் நடத்தலாம்.
கேரள மக்கள் தொகையில் 30.4 சதவீதம் பேர் முஸ்லீம்கள். அவர்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் 12 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர். அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது. ஆந்திராவில் 8.5 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர். அவர்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
ஆனால் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் உதித்த தமிழகத்தில் இதுவரை அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இன்னும் தங்களது சமூக நீதியை அடைவதற்காக அவர்கள் போராடிக் கொண்டுள்ளனர்.
முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்கள் தங்களது லட்சியத்தை அடைய நடத்தும் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு தரும் என்றார்.
ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு பேசுகையில்,
ரயில்வேயில் பணியாற்றுவோரில் வெறும் 3.1 சதவிதம் மட்டுமே முஸ்லீம்கள் உள்ளனர். இது மிக மிகக் குறைவு. முஸ்லீம்களின் உரிமையை பெற்றுத் தரும் வகையில் ரயில்வே அமைச்சரிடம் பேசி ரயில்வேயில் அதிக அளவில் முஸ்லீம்கள் வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், சச்சார் கமிட்டி பரிந்துரைகளை தேசிய அளவிலும், மாநில அளவிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதித்துறையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தேவேந்திரர்கள், ஆதி திராவிடர்கள், அருந்ததியர் சமூகத்தினருக்கு மாநிலத்தில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். கூட்டு குடிமனைத் திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முழுமையான பங்குகளைப் பெறும் வகையில் கிறிஸ்தவ நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications