ஷெரீப் நாடு திரும்ப முடியாது: முஷாரப்
இஸ்லாமாபாத்:முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாது. அவரை அனுமதிக்க மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாது என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
முஷாரப்பால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்டவர் நவாஸ் ஷெரீப். அதன் பின்னர் சவூதியிலும், தற்போது லண்டனிலும் வசித்து வருகிறார் ஷெரீப்.
இந்த நிலையில் தான் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார் ஷெரீப். அவரது சகோதரர் ஷபாஷ் ஷெரீப்பும் மனு செய்தார். இதை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், இருவரும் நாடு திரும்பலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் முஷாரப் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க அவர் முடிவு செய்தார். இதையடுத்து ஷெரீப் நாடு திரும்ப அனுமதிக்க முடியாது என்று முஷாரப் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு முஷாரப் அளித்துள்ள பேட்டியில், ஷெரீப் சகோதர்ரகள் பாகிஸ்தான் திரும்புவதை அரசு அனுமதிக்காது. அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாடு கடத்தல் முடிவை மீற நவாஸ் ஷெரீப் முடிவு செய்தால், அவரைக் கைது செய்து சிறையில் போடுவோம். இல்லாவிட்டால் மீண்டும் அவரை சவூதி அரேபியாவுக்கே திருப்பி அனுப்புவோம். பொதுத் தேர்தலில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்.
நாடு கடத்தல் ஒப்பந்த்தை ஷெரீப் மீற முடியாது. அதேபோல அவருக்கு அடைக்கலம் கொடுத்த சவூதி அரேபிய அரசும் இந்த ஒப்பந்தத்தை மீறக் கூடாது. ஷெரீப் மீண்டும் நாடு திரும்புவதை அனுமதிக்க முடியாது என்பதில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக உள்ளது என்று கூறியுள்ளார் முஷாரப்.
இதற்கிடையே, பெனாசிர் புட்டோவையும் கூட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாகிஸ்தான் திரும்ப அனுமதிப்பதில்லை என்றும் முஷாரப் தீர்மானித்துள்ளதாக அவரது கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஷெரீப் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சியின் முக்கியத் தலைவர்கள், எம்.பிக்களுடன் முஷாரப் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதிக்கு முன்பாகவே ஷெரீப் சகோதரர்கள் பாகிஸ்தான் திரும்பத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 15ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. எனவே அதற்கு முன்பாகவே ஷெரீப் சகோதரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று கோரி ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஷெரீப் சகோதரர்களின் வருகையும், முஷாரப்பின் எச்சரிக்கையும் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications