மெக்சிகோ: போலீஸ் மோப்ப நாயையேகடத்திய பலே போதை கும்பல்!
மெக்சிகோ:மெக்சிகோவில், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பயன்பட்டு வந்த வந்த காவல்துறை நாயை, போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றது அந்நாட்டுக் காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் படு சகஜமான ஒன்று. போதைப் பொருள் கடத்தல்காரர்களின் கொட்டத்தை அடக்க அந்நாட்டு அதிபர் பிலிப்பி கால்டரொன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் பதவிக்கு வந்த பின்னர் அவர் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக போர் தொடங்கினார். ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் ராணுவ வீரர்களை இந்தப் பணிக்காக நியமித்த அவர், போதைப் பொருள் கடத்தல் அதிகம் உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
இங்கு கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மெக்சிகோ காவல்துறைக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். அதாவது, போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க போலீஸார் பயன்படுத்தி வந்த, மோப்ப நாயை அவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
ரெக்ஸ் 4 என்று பெயரிடப்பட்ட அந்த பெல்ஜியம் நாட்டின் மலினியாஸ் ரக நாய், உயர் ரக மோப்ப நாயாகும். இந்த நாய்க்கு, போதைப் பொருட்களை கண்டுபிடிக்க விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போதைப் பொருள் கடத்தலை இந்த நாய் கண்டுபிடித்து காவல்துறைக்கு உதவியுள்ளது.
இந்த நிலையில், மெக்சிகோவின் சினலோவா பகுதியில் உள்ள மஸாடியான் விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்காக ரெக்ஸ் உள்ளிட்ட 8 மோப்ப நாய்களுடன் போலீஸார் வந்தனர்.
அனைத்து நாய்களும் தனித் தனி கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. நாய்களும், போலீஸாரும் தலைநகர் மெக்சிகோ நகரிலிருந்து வந்திருந்தனர்.
அத்தனை பேரும் மஸாடியன் விமான நிலையம் வந்து சேர்ந்த பிறகு ஒவ்வொரு நாயும் கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டன. அப்போது ரெக்ஸ் இருந்த கூண்டைத் திறந்து பார்த்தபோது அதில் ரெக்ஸ் இல்லை. மாறாக, அதே உருவத்தில் இருந்த இன்னொரு நாய் குட்டி தான் இருந்தது.
இதைப் பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர். இதுகுறித்து பொது பாதுகாப்பு அமைச்சக செய்தித் தெடார்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளில் இப்படி ஒரு சம்பவத்தை நான் கேள்விப்பட்டததே இல்லை. இது மிகவும் வித்தியாசமாக உள்ளது.
ஒரு துப்பறியும் நிபுணரைக் கடத்தியதற்கு சமமாக இந்த சம்பவத்தைக் கருதுகிறோம் என்றார்.
எப்படி இந்த நாய் மாற்றம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது விமான நிலைய ஊழியர் ஒருவர் கூறுகையில், காவல்துறை அதிகாரி போன்ற தோற்றத்தில் இருந்த நபர் ஒருவர் குட்டி நாயுடன் வந்து, ரெக்ஸுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே இந்த நாய்தான் பணியில் ஈடுபடப் போகிறது என்று கூறி ரெக்ஸை கூட்டிக் கொண்டு சென்றதாக தெரிவித்தாராம்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் ரெக்ஸ் கடத்தல் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கடத்தலைக் கண்டுபிடித்து போதை பொருள் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியுள்ளது. இப்போது ரெக்ஸையே கடத்திக் கொண்டு போய் விட்டதால், காவல்துறை அதிகாரிகள் கதி கலங்கிப் போயுள்ளனர்.
கடத்தல்காரர்கள் பெரிய லொள்ளர்களாக இருப்பார்கள் போல!












Click it and Unblock the Notifications