எய்ம்ஸ் ஸ்டிரைக் வாபஸ்: அன்புமணிகையெழுத்து இல்லாமல் சான்றிதழ் தர முடிவு!
டெல்லி:டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் மருத்துவர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தம் இன்று வாபஸ் பெறப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கையெழுத்து இல்லாமலேயே மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
டெல்லியில் உள்ள நாட்டின் முன்னணி மருத்துவக் கழகமான அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் இடையே பெரும் பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த மோதல் ஒரு கட்டத்தில் முற்றி வேணுகோபாலை சஸ்பெண்ட் செய்தார் அன்புமணி. இதை எதிர்த்து டாக்டர்களும், மாணவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் நீதிமன்றம், வேணுகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் டாக்டர்களும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த முறையும் அன்புமணியை முன்வைத்தே பிரச்சினை வெடித்தது.
கடந்த 3 ஆண்டுகளாக படிப்பை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களால் மேற்படிப்புக்குச் செல்ல முடியவில்லை. மேலும், அன்புமணியின் கையெழுத்துடன் கூடிய பட்டச் சான்றிதழ்களை நாங்கள் வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் கோரி வந்தனர்.
இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 1200 மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அவசர சிகிச்சைகளைக் கூடச் செய்ய மாட்டோம் என டாக்டர்கள் அறிவித்ததால் எய்ம்ஸில் நிலைமை மோசமடைந்தது.
சிகிச்சை பெற வந்த நோயாகள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து போராட்டத்தை உடனடியாக டாக்டர்கள் கைவிட வேண்டும். மாணவர்களை டாக்டர் வேணுகோபால் தூண்டி விடுகிறார். உடனடியாக அதை அவர் நிறுத்த வேண்டும். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார் அன்புமணி.
ஆனால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாணவர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில், நேற்று மாலை அன்புமணி விடுத்த எச்சரிக்கையில், போராட்டத்தை டாக்டர்களும், மாணவர்களும் கைவிடாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருப்பினும் போராட்டம் மேலும் தீவிரமடைந்ததே தவிர கைவிடும் நிலை உருவாகவில்லை. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய சுகாதாரத் துறை உடனடியாக தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தது.
இதையடுத்து டாக்டர்கள் மற்றும் மாணவர்களை எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபல் மற்றும் டீன் ஆகியோர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படும். சான்றிதழ்களில் சுகாதாரத் துறை அமைச்சரின் கையெழுத்து அவசியம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்திருப்பதால், அன்புமணியின் கையெழுத்து இல்லாமலேயே சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என முடிவானது.
இதையடுத்து தங்களது போராட்டத்த விலக்கிக் கொள்வதாக டாக்டர்களும், மாணவர்களும் அறிவித்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை நீங்கியுள்ளது.
எய்ம்ஸ் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அமைச்சர் அன்புமணிக்கு இன்னொரு தோல்வியாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications