கருணாநிதி இடிஅமீனின் மறு பிறவி-ஜெ
சென்னை:திருத்தணி அருகே குசஸ்தலை ஆற்றில் நடந்து வரும் மணல் திருட்டைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மணல் திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவராகிய நான் அறிக்கைகள் வாயிலாக கருத்து சொல்வதை பொறுக்க முடியாத கருணாநிதி, பினாமி பேர்வழிகள் வாயிலாக ஏகடியம் செய்து, அதை தனது துதி பாடும் பத்திரிக்கைளில் வெளியிட்டு மகிழ்ந்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது திமுகவினர் பையை நிரப்பும் கருவியாக மாறியுள்ளது. இதை கருணாநிதியின் சிறுபான்மை அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளும் கூட இன்றைக்கு சொல்ல ஆரம்பித்து விட்டன.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட விடையூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருவதை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகிறார்கள்.
இங்கு மணல் எடுக்க வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. காவல்துறையும் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையிலும், திருத்தணி சட்டசபை உறுப்பினர் ஹரி முன்னிலையிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும் திரளான தொண்டர்கள், மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல்துறையின் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த நிலையில் செம்மலை, அரி, முன்னாள் கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உள்ளிட்ட 82 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஹிட்லரிசமாகும்.
கைது செய்யப்பட்ட அதிமுகவினரை வேனில் ஏற்றியபோது அதை நகர விடாமல் கிராம மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.
அவர்களை அப்புறப்படுத்தவே காவல்துறைக்கு 3 மணி நேரம் பிடித்தது என்பதே இந்த மைனாரிட்டி அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக இந்த வழக்கைத் திரும்பப் பெற்று அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இடி அமீனின் மறு பிறவியாக கருணாநிதி செயல்படுவது அவரது ஆட்சியின் இறுதிக் கட்டம்தான். இந்த ஜனநாயக விரோதப் படு பாதக செயல் மூலம் இவரது ஆட்சியின் காலம் முடியப் போகிறது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications