நாளை சரத்குமாரின் புதிய கட்சி உதயம்:கலாமின் கனவுகளை நனவாக்குவேன் என்கிறார்
சென்னை:தான் தொடங்கும் புதிய கட்சி குடும்ப உறுப்பினர்கள் வந்து குழப்பம் செய்யாத, சாதி, மதம் கடந்த இயக்கமாகத் திகழும் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
நாளை புதிய கட்சியை தொடங்குகிறார் குமார். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களையும் நாளை வெளியிடவுள்ளார்.
![]() |
இந் நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் தென்கோடி கிராமம் ஒன்றில் ஒரு நடுத்தர வர்க்கத்தில் பிறந்து லயோலா கல்லூரியில் பியூசியும், புதுக் கல்லூரியில் பி.எஸ்சியும் முடித்து விட்டு இதயத்தில் ஊற்றெடுத்த அன்றைய சினிமா ஆசையால் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்து தமிழக மக்களின் பேராதரவால் இன்று ஒரு முன்னணி ஹீரோவாய் சுப்ரீம் ஸ்டாராக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக உயர்ந்து நிற்கிறேன்.
இந்த உயர்வுக்கு ஆதாரமாகிய தமிழ் மக்களை எந்நாளும் வாஞ்சையோடும், நன்றியோடும் போற்றி வணங்குகிறேன்.
எல்லோருக்கும் இருக்கும் அரசியல் ஆர்வம் என்னுள்ளும் பெருக்கெடுத்து கிடந்தது. நீண்ட அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்ததால் என்னுள் அரசியல் உணர்வு என்பது தானாக கிளர்ந்தெழுந்தது என்பது உண்மையே.
நம்மை ஆளாக்கிவிட்ட மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் ஏதாவது ஒரு வகையில் தொண்டு செய்து நன்றிக்கடன் ஆற்ற வேண்டும் என்ற உந்துதலாலும், ஆவலாலும் என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன்.
ஆனால், 2006ம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. என்னைநம்பிக் கிடந்த ரசிகப் பெருமக்களுக்கும், என் பாதச்சுவட்டில் பயணிக்கும் என் அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமான சூழ்நிலையில் அதிமுகவில் இணைய நேர்ந்தது.
2006 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன். இந்த நிலையில் அதிமுகவில் நான் இணைய எடுத்த முடிவு தவறான நிகழ்வு என்பதை இரண்டொரு மாதங்களிலேயே, அதிமுகவின் நடவடிக்கைகள் எனக்கு உணர்த்திவிட்டன.
இதனால் அங்கிருந்து நானாக வெளியேறினேன். நான் நினைக்கும் மக்கள் சேவையை, சுயமரியாதையோடு செய்து முடிக்க தேவையான சுதந்திரத்தை இன்னொரு கட்சியில் என்னால் பெற இயலாது என்பதை காலம் எனக்கு உணர்த்தியது. காலம் காலமாய் ஆட்சிகள்மாறினாலும், மாறாத காட்சிகளாய் பரவிக்கிடக்கும் பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல், வன்முறை போன்ற களைகளை பிடுங்கிட சுயமாய் ஒரு இயக்கம் வேண்டும் என்ற உந்துதல் என்னை உறுத்தியது.
உலக அரங்கில் நம் தாய்த் திருநாட்டை தலை நிமிர செய்திட தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்கிட, இளைஞர் சக்தியை ஒன்று திரட்டிட ஒரு புதிய அரசியல் இயக்கம் வேண்டும் என்று என் இதயம் இடித்துரைத்தது.
நேதாஜியின் வீரம், அண்ணல் அம்பேத்கரின் ஆற்றல், கர்மவீரரின் தியாகம், மக்கள் திலகத்தின் ஏழைப்பாசம் என எல்லாரும் கலந்த ஒரு நன்னெறி அரசியலை இந்நாட்டிற்கு தர வேண்டும் என்ற என் தாகம் அதிகரித்தது.
அதன் விளைவாக இதோ நாளை ஒரு புதிய இயக்கத்திற்கு புறப்பாடு செய்கிறேன்.
மக்களுக்கே உழைக்கும் மகத்தான இயக்கமாக இவ்வியக்கம் மலரும். தன் வீட்டுப் பெட்டகத்தை நிரப்பும் தன்னலம் இங்கிருக்காது. பதவிகள் பணத்திற்கு விற்கப்படாமல், ஆற்றல் படைத்தவர்கள் சமூக தொண்டில், தன்னார்வம் கொண்டவர்கள் தலைமைப் பதவிகளில் அலங்கரிப்பர்.
குடும்ப அங்கத்தினர்கள் உள்வந்து குழப்பம் செய்வதோ, ஆதிக்கம் நடத்துவதோ அறவே இருக்காது. சாதி, மதம் கடந்து சாதிக்கும் கட்சியாக இவ்வியக்கம் திகழும். தலைவர் முதல் தொண்டர் வரை மக்கள் தொண்டுக்கே அர்ப்பணிப்பர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை, ஒன்றியத்திற்கு ஒரு ஆலை, ஊர்தோறும் பள்ளிகள், ஒன்றியந்தோறும் கல்லூரிகள், வன்முறை இல்லா வாழ்க்கை, உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்கி
உலகக் கூலிகளாக கிடக்கும் இந்நாட்டு இளைஞர் சக்தியை நம் நாட்டு வளர்ச்சிக்கு மூல விதையாக்கும் முயற்சி என்று ஊர் உலகம் போற்றுகிற உன்னத, ஊழல் இல்லாத எளிமையான வலிமையான அரசு அமைப்போம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.













Click it and Unblock the Notifications