இன்று ராமதாஸ் அவசர ஆலோசனை
சென்னை:பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று திண்டிவனத்தில் உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
விஜய்காந்தின் கிடுகிடு வளர்ச்சி, தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளின் பின்னணி கொண்ட சரத்குமாரின் புதிய கட்சி, திமுகவின் ஓசி டிவி-2 ரூபா அரிசி பாலிட்டிக்சுக்கு பொது மக்களிடம் கிடைத்து வரும் நல்ல ஆதரவு ஆகியவற்றால் துவண்டு போய் கிடக்கின்றன அதிமுக, பாமக, மதிமுக ஆகியவை.
(இடைத் தேர்தல்களில் திமுகவின் அமோக வெற்றிகளுக்கு ஓசி டிவியே பிரதான காரணம் என்பதை பெரும்பாலான கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன.)
இதனால் தான் தினந்தோறும் மாவட்ட அளவில் ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். பன்னீரும் மாவட்டம் மாவட்டமாகப் போய் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்.
வைகோ தலைகீழாக நின்று பார்த்தும் கூட மதிமுகவின் ஆதரவு அப்படியே தான் உள்ளது. பெருகவில்லை. 4 சதவீத ஓட்டு கட்சி என்ற அளவிலேயே கடந்த 10 ஆண்டுகளாக நிற்கிறது மதிமுக.
இந் நிலையில் விஜய்காந்தின் விஸ்வரூபத்தில் இருந்து தனது கட்சியை காக்க ஒரே வழி ஆளும் கட்சியைத் தாக்குவதே என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ராமதாஸ் கலக்கி வருகிறார். தனக்கு செல்வாக்கே இல்லாத தென் மாவட்டங்களில் போய் அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டிவிட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலமாக பொறுத்துப் பார்த்துவிட்ட திமுக இப்போது பதிலடி தர ஆரம்பித்துள்ளது. சரியான பதிலடி தராமல் போனதால் ராமதாஸ் சொல்வதெல்லாம் சரியே என்ற கருத்து பரவ ஆரம்பித்துவிட்டது. இதை மிக லேட்டாக உணர்ந்து கொண்டு பாமகவை தாக்க ஆரம்பித்துள்ளது திமுக.
ராமதாஸை அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், ராசா ஆகியோர் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கூட இருந்தே தொல்லை கொடுக்கும் கட்சி நமக்குத் தேவையில்லை. திமுக தனித்தே நின்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தது என்று காட்டமாக ஆற்காடு வீராசாமி பேச டென்சனான ராமதாஸ் இன்று தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
கெட் அவுட் என்பதைத் தான் வீராசாமி மூலமாக கருணாநிதி டீசண்டாக சொல்வதாக ராமதாஸ் நினைக்கிறார்.
இந் நிலையில், இன்று தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்கப் பிரதிநிதிகள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இன்று மாலையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும் என அதன் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
ஆனால் பேசப்பட்டவுள்ள முக்கிய விஷயமே, திமுக கூட்டணியில் தொடருவதா, இல்லையா என்பது தான் என்கிறார் பாமக முக்கிய தலை ஒருவர்.












Click it and Unblock the Notifications