For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேணுகோபாலால் வந்த குழப்பம் - அன்புமணி பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) மாணவர்களுக்கு பட்டங்களை வழங்காதது டாக்டர் வேணுகோபால் செய்த தவறு. பட்டங்களை வழங்குவதற்காக இன்னும் ஒரு மாதத்திற்குள் பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து இன்று பிற்பகல் தங்களது வேலைநிறுத்தத்தை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக லோக்சபாவில் அமைச்சர் அன்புமணி தானாக முன்வந்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது அன்புமணி கூறுகையில், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பட்டங்கள், சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒரு மாதத்திற்குள் பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு டாக்டர் வேணுகோலுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவர்களின் ஸ்டிரைக்கால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. ஸ்டிரைக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறும் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

பட்டமளிப்பு விழா நடத்தாத காரணத்தால்தான் மாணவர்ளுக்கு பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.

இந்த தாமதத்திற்கு எய்ம்ஸ் இயக்குநர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

பட்டங்களில் எய்ம்ஸ் தலைவர், இயக்குநர், டீன் மற்றும் பதிவாளர் ஆகியோரின் கையெழுத்து இடம் பெற வேண்டும் (எய்ம்ஸ் தலைவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கையெழுத்து இல்லாமலேயே பட்டங்களைத் தரப் போவதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

2005ம் ஆண்டு 54 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் பட்டம் வழங்குவதற்காக சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டன. இதேபோல 2006ம் ஆண்டு 49 எம்.பி.பி.எஸ். பட்டங்களுக்கான சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டன.

இந்த சான்றிதழ்கள் எனது கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அந்த சான்றிதழ்களில் பதிவாளர் என்ற இடத்தில் எய்ம்ஸ் பதிவாளரான டாக்டர் வி.பி.குப்தாவின் கையெழுத்து இல்லாமல், யாரோ ஒரு சந்தீப் அகர்வால் என்பவரின் கையெழுத்து இருந்தது.

குப்தாதான் உண்மையான பதிவாளர். எனவே அவரது கையெழுத்து இல்லாமல் வேறு யாரோ ஒருவர் கையெழுத்துப் போட்ட பட்டச் சான்றிதழ்களை என்னிடம் அனுப்பியதால் அதை நான் டாக்டர் வேணுகோபாலுக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.

தவறை திருத்திக் கொண்டு முறையாக என்னிடம் பட்டச் சான்றிதழ்களை அனுப்பி வைக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டேன்.

அங்கீகரிக்கப்படாதவர்களின் கையெழுத்துடன் வெளியாகும் பட்டச் சான்றிதழ்கள் செல்லாது, சட்டவிரோதமானது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் நான் செயல்படுகிறேன். ஆனால் அதை அவர்களும், டாக்டர்களும் புரிந்து கொள்ளாதது வருத்தத்திற்குரியது என்றார் அன்புமணி.

முன்னதாக அன்புமணி அறிக்கை தாக்கல் செய்ய எழுந்தபோது பாஜக உறுப்பினர்கள் எழுந்து அன்புமணிக்கு எதிராக குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவர்கள் பேச விடாமல் இடையூறு செய்ததால், கோபமடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக சபையை ஒத்திவைத்து விட்டுச் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X