அசிங்கப்பூர் சென்னை: நானே குப்பை அள்ளுவேன்-விஜய்காந்த்
சென்னை:சென்னை மாநகரில் தேங்கியுள்ள குப்பைகளை, சென்னை மாநகராட்சி அள்ளாவிட்டால் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் தொண்டர்களுடன் சேர்ந்து நான் குப்பை அள்ளுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
சென்னை மாநகரை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று மாநகராட்சி தேர்தலின்போது திமுக முழக்கமிட்டது. சிங்கப்பூராக மாற்றாவிட்டாலும் பரவாயில்லை. அசிங்கப்பூராக மாற்றாமல் இருந்தால் போதும். அதை மக்கள் வரவேற்பார்கள்.
கடந்த சில நாட்களாக சென்னை நகரமே ஒரு பெரிய குப்பைத் தொட்டியாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இதனால் சென்னை நகரம் முழுவதும் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. வீடுகளில் குடியிருக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மழை பெய்து சாலைகளும், குடிசைப் பகுதிகளும் சேற்றுக்குள் மூழ்கி கிடக்கின்றன.
ஓனிக்ஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய நீல்மெட்டல் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை தந்துவிட்டு அவர்களுக்கு போதுமான குப்பை தொட்டிகள் கிடைக்கவில்லை என்று, அரசு சார்பில் அந்த நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்குவது நியாயமில்லை.
தமிழக அரசும், மாநகராட்சியும் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தேமுதிக தொண்டர்கள் வரும் செப்டம்பர் 2ம் தேதிமுதல் என் தலைமையில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்வார்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications