சென்னையில் குப்பை அள்ளிய எம்.எல்.ஏ, அதிமுகவினர் கைது
சென்னை:சென்னையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அள்ள முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தக் குப்பைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக தொண்டர்கள் குப்பைகளை அகற்றுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்திருந்தார்.
அதன்படி இன்று காலை வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இன்று அதிமுக தொண்டர்கள் திரண்டு குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் இறங்கினர்.
தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கலைராஜனும் இதில் கலந்து கொண்டார். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்து சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றனர்.
ஜெ. கண்டனம்:
குப்பை அள்ளிய அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லெண்ணத்தோடு குப்பை அள்ளியவர்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம். உடனடியாக கைது செய்யப்பட்ட அதிமுகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications