சரத் கட்சிக்குத் தாவிய திமுக பெண் பிரமுகர்மரியாதை கிடைக்காததால் விலகினேன்
திருநெல்வேலி:நெல்லை மாவட்ட திமுக துணைச் செயலாளரான சீனியம்மாள், சரத்குமார் தொடங்கியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகியுள்ளார். திமுகவில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால்தான் கட்சியிலிருந்து விலகியதாக சீனியம்மாள் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சென்னையில் தொடங்கினார். மாநில நிர்வாகிகளையும் அன்றே அவர் அறிவித்தார்.
அதன்படி மாநில துணைப் பொதுச் செயலாளராக சீனியம்மாள் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நெல்லை மாவட்ட திமுகவில் துணைச் செயலாளராக இருந்தவர். இந்த நிலையில் திமுகவிலிருந்து விலகி சரத்குமார் கட்சிக்கு சீனியம்மாள் வந்துள்ளார்.
திமுகவில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால் அங்கிருந்து விலகி சரத்குமார் கட்சியில் சேர்ந்துள்ளதாக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சீனியம்மாள்.
இது குறித்து அவர் கூறுகையில், திமுகவுக்காக 25 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். ஆனால் என் போன்றவர்களுக்கு கட்சியில் உரிய மாரியாதை கிடைக்கவில்லை. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏக்கள், மந்திரிகளாகி உள்ளனர்.
திமுகவில் கோஷ்டி மோதல் அதிகரித்துவிட்டது. எனவேதான் அங்கிருந்து விலகி சரத்குமார் கட்சியில் சேர்ந்துவிட்டேன். இந்த முடிவு நான் திடீரென எடுத்தது. இப்போது நான் நிம்மதியாக இருக்கின்றேன். என்னை போன்ற மனநிலையில் பலரும் இருக்கின்றனர்.
சரத்குமார் கட்சி சாதி கட்சி அல்ல. இதில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் சீனியம்மாள்.
சீனியம்மாள் திமுகவிலிருந்து விலகியதற்கு மாவட்ட செயலாளர் "கானா" வின் (கருப்பசாமி பாண்டியன்) ஒதுக்கல் போக்குதான் காரணம் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சீனியம்மாளைத் தொடர்ந்து மேலும் சில திமுக புள்ளிகளையும் சரத்குமார் தனது கட்சி பக்கம் இழுக்கக் கூடும் என பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications