மண்டபம் முகாமிலிருந்து 200 அகதிகள் மாயம்
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து கடந்த 3 மாதங்களில் 200 அகதிகள் மாயமாகியுள்ளனர். அவர்கள் எங்கு போனார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து அகதிகள் முகாமிலிருந்து யாரும் வெளியேறக் கூடாது என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
மண்டபம் அகதிகள் முகாமில் அதிகாரிகள் அவ்வப்போது கியூ பிரிவு போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம். இந்த சோதனையின்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆராயப்படும்.
அதுபோலவே சமீபத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது கடந்த 3 மாதங்களில் 200 அகதிகள் வெளியேறியுள்ளது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் முகாமிலிருந்து வெளியேறி தப்பியுள்ளனர். உள்ளூர் ஏஜென்டுகள் மூலம் அவர்கள் வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கே திரும்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தப்பி ஓடி விட்ட 200 அகதிகளின் விவரங்களையும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இலங்கையில் தற்போது சுனாமி நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் நிதியுதவி மற்றும் பிற உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதைப் பெறுவதற்காகவே அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ் குமார் இதை மறுத்துள்ளார். அகதிகள் தப்பி விட்டதாக தகவல் ஏதும் எங்களுக்கு வரவில்லை. யாரும் தப்பவில்லை என்றார்.
பெருமளவிலான அகதிகள் முகாமிலிருந்து வெளியேறியிருப்பதால், காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. முகாமிலிருந்து அகதிகள் வெளியேறுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு யார் புதிதாக வந்தாலும் அவர்களை தீவிரமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications