குப்பை அள்ளுவது தொடர வேண்டும் - விஜயகாந்த்
சென்னை: சென்னை மாநகர் சிங்கார சென்னையாக தொடர வேண்டுமானால் மாநகராட்சி தொடர்ந்து குப்பை அள்ளுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகரம் குப்பை மேடாக காட்சியளித்ததற்கு, மாநகராட்சி செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளைகூட செய்யத் தவறியதே காரணமாகும். மக்களின் வாழ்விடமே கவலைக்கு உரியதாகிவிட்டது. இந்நிலையில் நானே தலைமையேற்று தொண்டர்களுடன் உடனடியாக குப்பைகளை அகற்ற திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இதை நானே அரசியல் ஆக்கிவிடக்கூடாது என்ற காரணத்தால்தான் அரசுக்கு 2 நாள் அவகாசம் கொடுத்து, 2ம் தேதியன்று குப்பைகளை அகற்றப் போவதாக அறிவித்தேன்.
இந்த மோசமான சூழ்நிலையை உணர்ந்து அரசும், மாநகராட்சியும் போலீசாருடன் இணைந்து குப்பைகளை அகற்றியுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நீல்மெட்டல் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இதிலிருந்து தகுதியற்ற நிறுவனத்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது நிரூபணமாகிவிட்டது. இனிமேலாவது மாநகராட்சி மன்றம் நேர்மையோடு செயல்பட வேண்டும்.
குப்பை அகற்றுவது அரசியல் கட்சி பிரச்சனை அல்ல. மக்களின் அன்றாட பிரச்சனையாகும். அரசு இந்த அவசியத்தை உணர வேண்டும்.
நாங்கள் இதை எடுத்துக் காட்டியதற்காக அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டதோடு நின்று விடக்கூடாது. தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணியை அக்கறையுடன் அரசு செய்ய வேண்டும்.
இந்த அரசுக்கு குப்பை கூட்ட கூடத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
எவ்வாறு நான் குப்பை வாருவதாக அறிவித்த போராட்டத்துக்கு அவசியம் இல்லாமல் செய்தார்களோ, அதேபோல் எதிர்காலத்தில் சென்னை மாநகரத்தை தூய்மை நகரமாக வைத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications