யானை மீது உட்கார்ந்த ஈ-ஜெ குறித்து கருணாநிதி
சென்னை:
தன்னுடைய ஆட்சியில் என்ன நடந்தது என்று தெரியாமலே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போராட்டம் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: ஜெயலலிதா அன்றாடம் வெளியிடப்படும் அறிக்கைகளை கையெழுத்திட்டுதான் நாளேடுகளுக்கு அனுப்புகிறார். அதிலிருந்து அவற்றுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்று தான் அர்த்தம். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் மருத்துவமனை ஒன்று கட்ட அவர் ஆட்சிக் காலத்தில் கடந்த 2004ம் ஆண்டு பணம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது கட்டி முடிக்கப்பட்டப் பிறகு காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறாரே?
பதில்: அந்தப் பேரூராட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 2004ம் ஆண்டே நிதி ஒதுக்கப்பட்டதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறிக் கொள்கிறார். அதற்குப்பிறகு 2 ஆண்டுகாலம் அவர் தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்.
அந்த மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கீடு ஒன்றும் கோடிக்கணக்கில் அல்ல. லட்சக்கணக்கிலே நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட வேண்டியதுதான். எனவே அவரது ஆட்சியிலே அதனைக்கட்டி முடித்திருக்கலமா அல்லவா. அது மாத்திரம் அல்ல.
அறிக்கை விடுவதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், இப்போதும் சில நாட்களில் பதவிக்கு வந்து விடுவேன் என்று மக்களை எல்லாம் பயமுறுத்திக் கொண்டிருப்பவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொண்டு விட வேண்டாமா.
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள மருத்துவமனையை கடந்த 30ம் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் நானே திறந்து வைத்த உண்மையைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் ஜெயலலிதா கதை அளந்திருப்பது எப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்தி என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.
கேள்வி: தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படவில்லை என்று கூறி அதற்காக போராட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா கட்சிக்காரர்களை தூண்டிவிட்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: கடந்த மாதம் 17ம் தேதியன்று இதே காரணத்தைக்கூறி, நாகப்பட்டிணத்தில் போராட்டம் நடத்துமாறு கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா கட்டளையிட்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு விவரமாகவும், தெளிவாகவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கூட்டுறவுத்துறை பொறுப்பை வகிப்பவருமான கோ.சி.மணி புள்ளிவிவரங்களோடு பதில் அளித்தார். ஆனால் ஜெயலலிதா அறிக்கைவிட்டதோடு தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு, அந்த பதிலையே படிக்காமல், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அதே காரணத்திற்காக போராட்டம் நடத்துமாறு அறிக்கை விடுத்துள்ளார்.
அவர் தற்போது விடுத்துள்ள அறிக்கையிலே விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் நன்மைகளைச் செய்யவில்லை என்றும், பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு கழக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதை விவசாயிகளே நன்கு அறிவார்கள்.
ஓரளவிற்கு பத்திரிக்கை படிப்பவர்கள் அனைவருக்கும் அது தெரியும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் விவசாயிகள் வாங்கியிருந்த சுமார் ரூ.7,000 கோடி கடன் ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த பல விவசாயிகளே அந்த சலுகையை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவ்வாறு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இயலாது என்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா, கழக அரசின் இந்தச் சலுகைக்குப் பின்பு வாயைத் திறக்கவில்லை. மாறாக ஓராண்டு கழித்து இப்போது பயிர்க்கடன் வழங்கவில்லை என்கிறார்.
கேள்வி: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வெடிப்பினை நிகழ்த்த 3 அல்லது 4 பயங்கர குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்கும் என்றும் அந்தக் குழுக்கள் தங்கள் மேலிடத்தின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் தகவல்கள் வந்து மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கருணாநிதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையில் கேட்டு, அந்த அறிக்கை ஏடுகளில் எடுப்பாக வெளியிடப்பட்டுள்ளதே?
பதில்: யானையின் மீது உட்கார்ந்து கொண்டு ஈ நினைத்துக் கொள்ளுமாம். அந்த யானையை அந்த ஈயே ஓட்டிச் செல்வதாக அப்படித்தான் ஜெயலலிதாவும் நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் விமர்சிக்கிறார். எல்லாவற்றிலும் தலையிட்டு குட்டு பெறுகிறார். பாவம் ஆட்சியில் இல்லையே என்ற அவஸ்தை, ஆதங்கம், ஆத்திரம். அதனால்தான் அன்றாடம் ஒரு அறிக்கை.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications