வைர விழா காணும் விவேகானந்தா கல்லூரி
சென்னை: சென்னையின் பிரபல விவேகானந்தா கல்லூரி தனது 60வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
கடந்த 1946ம் ஆண்டு சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக இருந்த சுவாமி கைலாசனந்தாவால் தொடங்கப்பட்டதுதான் விவேகானந்தா கல்லூரி.
திறமையின் அடிப்படையில் மட்டுமே இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இந்தக் கல்லூரி 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து வைர விழா காணுகிறது.
இதுகுறித்து கல்லூரியின் செயலாளர் சுவாமி கீதசாரனந்தா கூறுகையில், இக்கல்லூரியில் 3000 மாணவர்கள் படிக்கிறார்கள். 40 வகையான படிப்புகள் இங்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இரவு நேரக் கல்லூரியும் இங்கு இயங்கி வருகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், சென்னை ஐஐடி இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான எஸ்.வெங்கட்ராகவன் மற்றும் ஸ்ரீகாந்த், டென்னிஸ் வீரரான் ரமேஷ் கிருஷ்ணன், மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், சட்டீஸ்கர் மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஜெர்மனி நாட்டிற்கான இந்திய தூதர் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் கர்நாடக பாடகர்களான விஜய் சிவா மற்றும் சஞ்சய் சுப்ரமணியம் ஆகியோர் இங்கு படித்த முன்னாள் பிரபல மாணவர்கள் ஆவர் என்றார்.
செய்தி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஜெயக்குமார் கூறுகையில், பல்வேறு ஆய்வுகளில் விவேகானந்தா கல்லூரி ஈடுபட்டுள்ளது. இதற்காக பலவேறு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
வைர விழா கொண்டாட்ட நிறைவு விழா செப்டம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
