டைட்டானியம் ஆலையை எதிர்த்து வழக்கு:br/அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குட்டம் தேரி மற்றும் தரிசு நில மேம்பாட்டு விவசாயிகள் சங்கச் செயலாளர் திருநாவுக்கரசு இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடங்க டாடா நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவுள்ளனர்.
இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சாத்தான்குளம், ராதாபுரம் பகுதிகளில் தென்னை, முருங்கை போன்ற வருமானம் தரக் கூடிய மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. முருங்கைக் காய்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் காய்கறிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. வளமான பகுதி இவை.
டைட்டானியம் டை ஆக்சைடு ஆலைக்காக 6 மீட்டர் ஆழத்துக்கு மணல் எடுத்தால், மரங்கள் மற்றும் பசுமை வளம் பாதிக்கும் என கடந்த 4.1.2006 அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர், தொழில்துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார்.
அதன் பிறகும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து தமிழக தலைமைச் செயலாளர் தடையில்லா சான்று பெற்றுள்ளார். இந்தத் திட்டத்துக்காக தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தினால் வளமிக்க நிலங்களையும், கால் நடைகளையும் விவசாயிகள் இழக்க நேரிடும். ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்.
மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 28.1.1993 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், கனிம வளம் தொடர்பான தொழிற்சாலைகளை தொடங்கும் பட்சத்தில் அந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தால் கடல் வளம் அழிந்து எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்து விடும் ஆபத்து உள்ளது. இந்த தொழிற்சாலைக்காக இதுவரை சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு எதுவும் செய்யப்படவில்லை.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. தமிழக அமைச்சர்கள் நடத்திய ஆய்வும், இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணி, பொதுக் கூட்டங்களும் மக்களை திசை திருப்பும் முயற்சியாகும்.
எனவே தமிழக அரசும், டாடா நிறுவனமும் செய்து கொண்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சிவக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பரிசீலித்தது. பின்னர் இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், தொழில்துறைச் செயலாளர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், டாடா நிறுவன திட்ட அதிகாரி ஆகியோருக்கு 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்னர்.


Click it and Unblock the Notifications
