ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை - ராமதாஸ்
சென்னை:
மக்கள் மீதும், கல்வி மீதும் இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வரும் கல்வி ஆண்டில் சம்ச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரியும், முத்துக்குமரன் குழு அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரியும், தமிழக மாணவர் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ராமதாஸ் பேசியதாவது,
சோறு வேண்டும், வாழ இடம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கல்வி வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்துகிறோம். ஏழைகளுக்கு ஒரு கல்வியும், பணக்காரர்களுக்கு ஒரு கல்வியும் இருக்கிறது. இதை நீக்கி, அனைவருக்கும் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரவேண்டும்.
இதற்காக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையிலான குழுவை அரசு நியமனம் செய்தது. அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. அதை அரசு உடனே வெளியிட வேண்டும்.
தமிழக மக்களின் மனங்களில் புரட்சி மனப்பான்மையை உருவாக்க வேண்டும். வேறு ஏதோ புரட்சி என நினைக்க வேண்டாம். அவர்கள் கல்விப் புரட்சி செய்ய வேண்டும். அந்தப் புரட்சிக்கான இயக்கத்தை தொடங்கவே இங்கு வந்துள்ளேன். மக்களிடையே புரட்சி வெடிக்க வேண்டும். அதுவும் கிராமங்களில் ஏற்பட வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் கல்வி கிடைக்கும்.
முதல்வரின் குழந்தைகள் படிக்கும் அதே பள்ளியில் ஏழைத் தொழிலாளியின் குழந்தையும் படிக்க வேண்டும். அதற்காகத்தான் பொதுக் கல்வி முறையும், அருகாமை பள்ளிக் கல்வி முறையும் கொண்டு வரவேண்டும் என்கிறோம்.
இது தொடர்பாக 1966 முதல் இன்று வரை பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களும் பொதுக்கல்வி முறையை வலியுறுத்தியுள்ளன. ஆனால், 40 ஆண்டு காலமாக இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதற்கு யார் காரணம் மக்களின் மீது, கல்வியின் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததுதான்.
சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்டி, முத்துக்குமரன் அறிக்கையை வெளியிட வேண்டும். சமச்சீர் கல்வி முறையை கொணடு வந்தால், சில தனியார் கல்வி நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கலாம். நீதிமன்றம் செல்லலாம். அப்படி செல்லாமல் இருக்க தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிதி உதவி செய்தால், அவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள். யாரும் வாயை திறக்கமாட்டார்கள்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், கல்வி புரட்சி மட்டுமல்ல, சமுதாயப் புரட்சியும் ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரவேண்டும் என்று ராமதாஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications