ராமதாஸ் பேசுவது மேடையில் பேசத்தான்br/அழகாக இருக்கும் - கருணாநிதி
சென்னை:
சமச்சீர் கல்வி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது மேடைப் பேச்சுக்குத்தான் அழகாக இருக்கும். ஆனால் அதை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான் புரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:
கேள்வி: எதிர்க்கட்சிகளை விட தோழமைக் கட்சியான பாமக தலைவர் தொடர்ந்து உங்களைத் தாக்கிக்கொண்டே இருக்கிறாரே?
பதில்: அவர் தாக்குவதாக யார் சொன்னது. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைத் தான் வழங்குகிறார். திமுகவினர் அவர் பேசுவதை எப்படி எடுத்துக் கொண்டாலும், என்னைப் பொறுத்தவரையில் நான் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் அவர் எழுப்பிய பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழியமைப்போம் என்று கூறப்பட்டது.
இவ்வாறு தேர்தல் அறிக்கை வெளியிட்டதோடு திமுக ஆட்சிக்கு வந்ததும், அதைப் பின்பற்றாமல் விட்டு விட்டதா என்றால் அதுவும் கிடையாது. ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி வழங்குவதற்காக முத்துக்குமரன் குழுவினரையும் உடனடியாக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் உரிய காலத்தில் கூடி பல ஆய்வுகளை செய்து அதற்கான அறிக்கையினை அரசுக்கு கடந்த 04-07-2007 அன்று தாக்கல் செய்துள்ளார்கள்.
எனவே இதிலும் அரசு ஏதோ சுணக்கம் செய்து விட்டதாகவும் கூறமுடியாது. அந்த அறிக்கையினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பொதுவாக இது போன்ற முக்கியமான அறிக்கைகளை முதலில் சட்டமன்றத்தில் வைப்பது தான் வாடிக்கை. கடந்த ஜூலை மாதத்தில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதால், அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் கூடவிருக்கும் சட்டப்பேரவையிலே தான் அறிக்கை வைக்கப்பட வேண்டும். உடனடியாக சட்டமன்றத்தை இதற்காக கூட்டி அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமென்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக டைட்டானியம் தொழிற்சாலை பிரச்சனைக்காக சட்டமன்றத்தை கூடி விவாதம் நடத்தவேண்டும் என்று ஒரு அறிக்கை விடுத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் எழும் பிரச்சனைக்காக சட்டமன்றத்தை கூடி விவாதம் நடத்துவதென்பது நடக்கக் கூடிய காரியமா என்பதை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சட்டமன்றம் கூடவுள்ளது. அப்போது இது பற்றியெல்லாம் விவாதிக்க இருக்கிறோம். அதற்குள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும், அதில் இந்த பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று சொல்வது மேடையில் பேச எளிதாக இருக்குமே தவிர, நடைமுறைக்கு எளிதாகுமா என்று எண்ணிப் பார்ப்பது நல்லது.
டாக்டர் முத்துக்குமரன் அளித்த அறிக்கையினை மாநில திட்டக்குழு மற்றும் கல்வித்துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் குழுவிடம் கொடுத்து அவர்களின் பரிந்துரைகளும் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் நேற்றைய தினம் இதுபற்றி விவரமாக அறிக்கையும் ஏடுகள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பிரச்சினை என்பது இந்த நாட்டின் வருங்கால தலைமுறைகளான மாணவர்களின் படிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இதனை நடைமுறைப்படுத்த முன்வரும்போது அதற்கு எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் தேவைப்படும். அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் அவசரப்பட்டும் பயனில்லை.
இன்னும் சொல்லப்போனால், சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப் படுத்திட தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் போல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாட மொழியாக்குவதற்கே இத்தனை வருட காலமாகப் போராட வேண்டியிருந்தது. என்னுடைய குடும்பக் குழந்தைகள் மீது ராமதாசுக்கு எப்போதும் அக்கறை உண்டு என்பதை நான் அறிவேன்.
என்னைப் பொறுத்தவரையில் எங்கோ உட்கார்ந்து கொணடிருப்பவனாக என்னைக் கருதி கொள்பவன் அல்ல. அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களில் ஒருவனாகத் தான் என்னைக் கருதிக் கொண்டிருப்பவன். என் வீட்டுப் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications