யானைகள் அட்டகாசம் - தென்னந்தோப்புகள் நாசம்
கடையநல்லூர்:
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்னந்தோப்பில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் முதல் சிவகிரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தைபுலி, காட்டு பன்றி, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் ஏராளமாக உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, மா போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
மலைப்பகுதிக்குள் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக நுழைந்து பெருத்த சேதம் விளைவிப்பதால் அப்பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுதது வந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு கடையநல்லூரை அடுத்த கருப்பாநதி அணைக்கட்டு பகுதியிலிருந்து அடவிநாயினர் அணைக்கட்டு பகுதி வரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சோலார் மின்வேலி அமைத்தது.
இருப்பினும் சில வேளைகளில் மின்வேலிகளை தாண்டியும் காட்டு யானைகள் தோப்புக்குள் நுழைந்து விடுகின்றன.
நேற்று (06-09-2007) மாலையில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடையநல்லூரை அடுத்த கருப்பாநதி அணைப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்தன. தென்னந்தோப்புக்குள் புகுந்த யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள் ஏராளமான தென்னை மரங்களை நாசமாக்கி சென்று விட்டன.
காட்டு விலங்குகளால் விவசாயிகள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் அரசு அவர்களுக்கு காலதாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications