விமானம் ஏரியில் விழுந்து 4 பேர் சாவு
பெங்களூர்:
பெங்களூரில் விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியதில் நான்கு பேர் பலியானார்கள்.
பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்திலிருந்து, கேரளாவின் பிரபல நகைக்கடையான அலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் நான்கு பேருடன் ஒரு விமானம் கொச்சிக்குக் கிளம்பியது. அந்த விமானத்தை சந்தோஷ்குமார் என்பவர் செலுத்தினார். சண்முகம் இணை பைலட்டாக செயல்பட்டார். அவர் தவிர முகம்மது பஷீர் மற்றும் சுனில் ஜோசப் என்பவரும் இருந்தனர்.
சந்தோஷ்குமார் பீகாரைச் சேர்ந்தவர். சுனில் கேரளாவைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த விமானம் கெளடன்பாளையம் என்ற புறநகர்ப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அங்குள்ள வறண்ட ஏரிப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட விமானி சந்தோஷ்குமார், கோளாறு ஏற்பட்டிருப்பதால் விமான நிலையத்திற்கே திரும்பி வருவதாக தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால் அடுத்த சில விநாடிகளில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. விமானம் விழுவதைப் பார்த்த சிலர், வீடுகள் மீது அது விழுந்து விடுமோ என்று அஞ்சினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வீடுகள் மீது விமானம் விழவில்லை. இல்லாவிட்டால் உயிரிப்பு அதிக அளவில் இருந்திருக்கும்.
விமானம் கீழே விழுந்ததும், சண்முகம் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவரை நிமான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
விபத்தில் சிக்கிய விமானம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாகும். 6 மாதங்களுக்கு முன்புதான் அலுக்காஸ் ஜூவல்லரி உரிமையாளரான ஜாய் அலுக்காஸ் இதை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அது விபத்துக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications