பொன்முடி முடிவு காலம் கடந்தது - ராமதாஸ்
சென்னை:
சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தப் போவதாக அறிவுத்தவுடன், வெளிநாட்டிலிருந்து சிமென்ட் வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது காலம் கடந்த முயற்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக தொழில் வளர்ச்சிக்கு மாற்று திட்டம் ஒன்றை பாமக தயாரித்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தினால் எல்லோருக்கும் சம வேலைவாய்ப்பு கிடைக்கும். கிராமப்புற மக்கள் அதிக பயன்பெறுவார்கள்.
தற்போது தொழில்வளத்தை பெருக்குவோம் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான் பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் முதலீடு செய்து பல்வேறு சலுகைகளை வழங்குகிறார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பெரிய தொழில் நிறுவனங்களும், உயர்கல்வி படித்தவர்களும் மட்டுமே பயன்பெறுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படும் போது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.
கடந்த 6,7 ஆண்டுகளில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் குவிந்துள்ளன. இதனால் 8 சதவீதம் பேர்தான் பயன்பெற்றுள்ளார்கள்.
அடுத்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரும் என்று சொல்கிறார்கள்.
எல்லோருக்கும் சம வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாமக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கடந்த 2 மாதங்களாக நிபுணர்களுடன் கலந்து பேசி ஒரு புதிய தொழில் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இதன்படி உலக மயமாக்கலுக்கு பதிலாக சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம்.
இந்த புதிய திட்டத்தின்படி விவசாய பொருள் உற்பத்தி, கிராம கைத்தொழில் வளர்ச்சி உள்ளிட்ட வழிமுறைகளை கூறி இருக்கிறோம். இதன் மூலம் கிராமதத்தில் பெரும்பாலானவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த திட்டத்தை அடுத்த மாதம் டெல்லி செல்லும்போது பிரதரிடமும் வழங்க இருக்கிறேன். தமிழக அரசு புதிய தொழில் கொள்கைகளை அறிவிக்கும்போது எங்கள் ஆலோசனைகளையும் சேர்த்துக் கொண்டால் அது நாட்டு மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்.
சிமென்ட் இறக்குமதி செய்வதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இது காலம் கடந்த முயற்சியாகும். எத்தனையோ சிமென்ட் ஆலை அதிபர்களை சந்தித்து பேசி விலையை குறைக்க சொன்னார்கள். ஆனால் அரசு அவர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிமென்ட வரியைக் குறைத்தார். ஆனாலும் சிமென்ட் அதிபர்கள் விலையை குறைக்கவில்லை. முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நல்ல பயன் கிடைத்திருக்கும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications