'ராமர்': சர்ச்சை பதிலை திரும்பப் பெற்றதுbr/மத்திய அரசு-பாலத்தை இடிக்க தடை நீட்டிப்பு
டெல்லி:
ராமர் பால வழக்கில் பெரும் சர்ச்சையை எழுப்பிய, ராமர் குறித்த கருத்துக்களை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் திரும்பப் பெற்றது. இதையடுத்து ராமர் பாலத்தை இடிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை 3 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமர் பாலம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விளக்க அறிக்கையில், ராமாயணம் என்பது ஒரு இதிகாசம். அதில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களோ அல்லது நிகழ்வுகளோ உண்மையானவை என்று கூற முடியாது. அதற்கான வரலாற்றுப் பூர்வ ஆதாரங்களும் இல்லை.
மேலும் ராமர் பாலம் இயற்கையானது, மணல் திட்டுக்களால் உருவானது. அதை மனிதர்கள்தான் கட்டினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
ராமாயணத்தையும், ராமரையும் கற்பனையானவை என்று மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறை வர்ணித்தது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும் சட்ட அமைச்சர் பரத்வாஜையும் சந்தித்து இந்த அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் மத்திய அரசின் இந்த அறிக்கையைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டத்தை தொடங்கவும் பாஜக திட்டமிட்டது.
சோனியா தலையிட்டார்:
நிலைமை விபரீதமாவதற்கு முன்பு சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டார்.
தொல்பொருள் ஆய்வுத்துறை விளக்க அறிக்கையில் உரிய திருத்தங்களை செய்யுமாறு அவர் அரசுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விளக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வாசகங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு தீர்மானித்தது.
இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் அவசரமாக செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அவர்களிடம் பரத்வாஜ் கூறுகையில், தொல்பொருள் விளக்க அறிக்கையில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகள் திரும்பப் பெறப்படும். இதுதொடர்பாக துணை விளக்க அறிக்கை வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
ராமர், இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம், ராமர் மத நம்பிக்கையின் சின்னம். அவர் குறித்த விவாதத்திற்கே இடமில்லை. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் விளக்க அறிக்கையில், தேவையில்லாத விஷயங்கள் சேர்க்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தவறான அறிக்கை என்றார் பரத்வாஜ்.
இந்த நிலையில் ராமர் பாலம் தொடர்பான வழக்குள் இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலசுப்ரமணியம், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
2 நாட்ளுக்கு முன்பு மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ராமர் பாலம் தொடர்பாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தெரிவிக்கப்பட்டிருந்த ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்ைல என்ற கருத்து சர்ச்சையை எழுப்பியதால் அதைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இற்கு 3 மாத கால அவகாசம் தேவை. அந்தக் கால கட்டத்திற்குள் இதுதொடர்பாக சுமூக முடிவை எட்ட மத்திய அரசு முயற்சிக்கும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 3 மாத கால அவகாசத்திற்குள் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஆய்வுகளை மேற்ெகாள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதுவரை ராமர் பாலத்தை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் 3 மாதங்களுக்கு நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அமைச்சரை நீக்க பாஜக கோரிக்கை:
முன்னதாக, ராமர் இல்லை என்று கூறி மத்திய தொல்பொருள் துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையை, கலாச்சாரத் துறை அமைச்சர் பார்த்து ஒப்புதல் அளித்தது தெரிய வந்தால் உடனடியாக அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது.
இதுகுறித்து பஜாக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இப்படிப்பட்ட அவதூறான, விஷமத்தனமான அறிக்கையை யார் தயாரித்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அறிக்கையை கலாச்சாரத் துறை அமைச்சர் அல்லது வேறு எந்த அமைச்சர் பார்த்து ஒப்புதல் அளித்திருந்தாலும் அவர்களையும் நீக்க வேண்டும்.
மத நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் வகையில், மத்திய அரசு நடந்து கொண்டு விட்டது. இந்த விஷம அறிக்கையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய அளவில் பிரச்சினையை எழுப்புவோம்.
ராமர், சீதை, ஹனுமானின் உருவப் படங்களுடன் கூடிய நமது அரசியல் சாசனத்தையும் மத்திய அரசு இதன் மூலம் இழிவுபடுத்தியுள்ளது.
இந்துக்களின் உணர்வுகளை அசிங்கப்படுத்தி விட்டனர். இதை எந்த நிலையிலும் பொறுத்துக் ெகாள்ள முடியாது என்றார் சிங்.












Click it and Unblock the Notifications