கருணாநிதிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
கோவை:
அல் உம்மா, மதானி இயக்கம் என்ற பெயரில், முதல்வர் கருணாநிதிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஒரு போஸ்ட் கார்டு வந்தது. அதில், பெயர், முகவரி எதுவும் இல்லை. அந்த தபால் கார்டில், காந்திராஜன், ஆணையர், கோவை காவல்துறை எனக் குறிப்பிடப்பட்டு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அதில், கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபையில் ஆளுநர் முன்னிலையில், காவல்துறை வேலையில் சேர வயது வரம்பு 24 என்பதிலிருந்து 29 ஆக உயர்த்தி அறிவித்தார். இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
காவல்துறை வேலையில் சேர வயது வரம்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
எனவே வருகிற 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கும் நாளன்று வயது வரம்பு பற்றி கருணாநிதி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
முஸ்லீம்களுக்கு போலீஸ் வேலையில் சேர அதிக இடம் ஒதுக்க வேண்டும்.
அதில் உயரம் 168 செ.மீட்டரிலிருந்து 163 செ.மீட்டராக குறைக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற 15ம் தேதியன்று மனித குண்டு மூலம் கலைஞரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளோம். இதை உடனே தெரிவிக்க வேண்டும். இது மிரட்டல் அல்ல, அல்லாவின் ஆணை. அல் உம்மா, மதானி இயக்கம் என அதில் கூறப்பட்டிருந்தது,.
இந்தக் கடிதம் பீளமேட்டிலிருந்து அனுப்பப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications