குமரன் பத்மநாதன் கைதாகவில்லை: பிரணாப்
பாங்காக்:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் (கேபி) தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்று பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உறவினர் குமரன் பத்மநாதன். புலிகள் அமைப்புக்கு தேவையான நிதியை வெளிநாடுகளிலிருந்து சேகரித்துத் தரும் பொறுப்பையும், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பொறுப்பையும் இவர் மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் குமரன் பத்மநாதனை பாங்காக்கில் வைத்து இன்டர்போல் போலீஸார் கைது செய்ததாக, பாங்காக் போஸ்ட் என்ற இதழ் செய்தி வெளியிட்டது.
மேலும், குமரனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சிபிஐயும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தம் வசம் எடுக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் தாய்லாந்து அரசும், தாய்லாந்து இன்டர்போல் அமைப்பும் இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்து விட்டன. குமரன் பத்நாதன் கைது செய்யப்படவில்லை என்று அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று பாங்காக் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து இந்திய அரசுக்கு தாய்லாந்து அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.
இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை என்று பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை தாய்லாந்து அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications