ராமர் பாலம்-சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்br/-வெங்கையா நாயுடு, இல.கணேசன் கைது
சென்னை:
ராமர் பாலம் குறித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் நகலை எரித்து சென்னையில் போராட்டம் நடத்திய பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சேது சமுத்திர கால்வாய் தொடர்பான வழக்கில் மத்திய தொல்லியல் துறை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் ராமரும் இல்லை, ராமர் பாலமும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இன்று சர்ச்சைக்குரிய வாசகங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நகல் எரிப்பு போராட்டம் பாஜக சார்பில் சென்னையில் நடந்தது. பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இல.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் உட்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெங்கையா நாயுடு பேசுகையில், மத்திய அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சேது சமுத்திரத் திட்டம் வேண்டாம் என்று கூறவில்லை. ராமர் பாலத்தை இடிக்காமல் அதை நிறைவேற்ற கூறுகிறோம். ராமரை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு முட்டாள் தனமானதாகும் என்று பேசினார்.
பின்னர் வெங்கையா, இல.கணேசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications