நெடுமாறனின் உண்ணாவிரதம் தொடர்கிறது:br/கைவிட கருணாநிதி கோரிக்கை
சென்னை:
ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் சேகரித்த ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி தரவில்லை. பெருத்த மெளனம் சாதித்து வருகிறது.
இதையடுத்து பழ. நெடுமாறன் நானே படகுகள் மூலம் இலங்கைக்கு சென்று இவற்றை வழங்குவேன் என அறிவித்தார். அதன்படி நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் நேற்று முன்தினம் நாகைக்குச் சென்றார். அங்கு துறைமுகத்தில் அவர்களுக்குப் படகுகள் தரப்படவில்லை. படகுகள் தரக் கூடாது என்று மீனவர்களை அரசு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இடத்திலேயே தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் நெடுமாறன். நேற்று சென்னை திரும்பிய நெடுமாறன், கோயம்பேட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.
அவரைக் கைது செய்ய போலீஸார் முயன்றனர். இதை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களையும் போலீஸார் முரட்டுத்தனமாக தாக்கினர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் நெடுமாறனை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, இயக்குநர் சீமான் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், நெடுமாறன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறனுக்கு அவர் விடுத்துள்ள கடிதத்தில், பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு. சேலம் செல்லும் ரயிலில் இருந்து இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
தங்களின் உயிருக்கு இந்த உண்ணா நோன்பு தாங்காது. தாங்கள் எடுத்துள்ள முயற்சியை தமிழக அரசு சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன்.
இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணா நோன்பினை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன். ஈரோட்டில் இருந்து 2 நாட்களில் திரும்பியவுடன், சந்தித்துப் பேசுவோம். என வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இன்று காலையும் பழ. நெடுமாறன் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications