அதிபர் தேர்தலில் முஷாரப் மனைவி போட்டி?
டெல்லி:
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிட அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், முஷாரப்பின் மனைவி ஷெஹாபா போட்டியிடக் கூடும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட முஷாரப் தீவிரமாக உள்ளார். மீண்டும் தானே அதிபராகவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக பெனாசிர் பூட்டோவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அது முறிந்து விட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முஷாரப்புக்கு கடும் போட்டியாக இருப்பார் எனக் கருதப்பட்ட நவாஸ் ஷெரீப்பை, நாடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே சவூதிக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டது பாகிஸ்தான் அரசு.
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் முஷாரப் மீண்டும் போட்டியிட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என புதிய பரபரப்பு எழுந்துள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தனக்குப் பதில் தனது மனைவி ஷெஹாபாவை அதிபர் தேர்தலில் நிறுத்த முஷாரப் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பல்வேறு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மனைவியை அதிபராக்கி விட்டு, அவரைப் பின்னாலிருந்து முஷாரப் இயக்கக் கூடும் என கூறப்படுகிறது.
ஷெஹாபா போட்டியிட்டால் அவரை எதிர்த்து நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் போட்டியிடுவார் என்று நவாஸ் ஷெரீப்பின் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விரைவில் குல்சூம் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தான் மீண்டும் நாடு திரும்பும் தேதியை இன்று அறிவுக்கவுள்ளார். அவரை நாடு திரும்ப முஷாரப் அனுமதிப்பாரா அல்லது ஷெரீப்பைப் போல நாடு கடத்துவாரா என்ற பரபரப்பு பாகிஸ்தானில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications