'ஸ்வாகா' செய்யத் துடிக்கும் கேரளா;br/தமிழக ரயில்வே தப்பிக்க 2 யோசனைகள்!
சென்னை:
புதிய ரயில் மண்டலம் என்ற பெயரில் மறுபடியும் தமிழக நலனைச் சுரண்ட நினைக்கும் கேரளாவிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, தமிழகத்திற்குட்பட்ட பகுதிகளை இணைத்து தனியாக ஒரு ரயில் மண்டலத்தை ஆரம்பிக்க வேண்டும், நெல்லை உள்ளிட்ட பகுதிகளை கேரளாவிலிருந்துப் பிரித்து புதிய ரயில் கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கேரளாவை விட 2 மடங்கு பெரிதான தமிழகத்தில் தமிழகத்திற்கு மொத்தமே சென்னை, மதுரை, திருச்சி என மூன்று ரயில் கோட்டங்களே உள்ளன. ஆனால் குட்டி மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்காடு என இரு ரயில்வே கோட்டங்கள் உள்ளன.
இந்த இரு ரயில் கோட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பகுதிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகள் வருகின்றன.
இதேபோல கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்குப் பகுதி முழுவதும் பாலக்காடு கோட்டத்தின் கீழ் இருந்து வருகிறது.
இப்படி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை தன் வசம் வைத்துள்ள கேரளா, இந்தப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து கேரள மாநில ரயில் நிலையங்களை மேம்படுத்தவே அதிகம் செலவிட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள ரயில் பாதைகளை அகலப் பாதைகளாக மாற்றுவதற்கும், அங்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் தமிழகத்திலிருந்து கிடைத்த வருமானத்தைத்தான் கேரளா பயன்படுத்தி வருகிறது. இதற்கு தெற்கு ரயில்வேயில் உள்ள சில மூத்த மலையாள அதிகாரிகளும் உடந்தையாக, உதவியாக இருந்து வந்தனர்.
இதன் காரணமாக, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, பின்னலாடைத் தொழிலில் முன்னணியில் இருக்கும் திருப்பூர், ஜவுளி உள்ளிட்ட பல தொழில்களில் சிறந்து விளங்கும் ஈரோடு, மாங்கனி நகரமான சேலம் ஆகியவை பெரிய அளவில் வளர முடியாமல் தேக்கமடைந்து கிடக்கின்றன.
இதே நிலைதான் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகள். இந்தப் பகுதிகளில் இன்னும் அகலப் பாதை முறையாக வரவில்லை. ரயில் நிலையங்களில் வசதிகள் படு மோசமாக உள்ளன.
செங்கோட்டை வரை போடப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க கேரள அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை. தொடர்ந்து அதைக் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் இயங்கும் ரயில்களை கேரளா வரை நீட்டித்து 'புத்தியைக் காட்டி' வருகின்றனர்.
இப்படி தமிழகத்திலிருந்து பெரும் அளவில் வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அதை தங்களது சுய நலனுக்காகவே தொடர்ந்து பயன்படுத்தி வரும் கேரளா தற்போது சேலம் கோட்டம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
சேலம் கோட்டம் கூடவே கூடாது என்று எகத்தாளமாக ஆரம்பத்தில் கூக்குரலிட்டது கேரளா. ஆனால் தமிழக மக்கள் காட்டிய ஆணித்தரமான எதிர்ப்பைக் கண்டு முதல் முறையாக பயந்தது கேரளா. இதனால் சேலம் கோட்டத்தை அமைத்தால் அமைத்துக் கொள்ளுங்கள், ஆனால், கோவை, ஈரோடு, திருப்பூர் எங்களுக்குத்தான் என்று வேறு ரூட்டில் போக முற்பட்டார்கள்.
இதற்கும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி ஒரே நாளில் கேரளாவையே ஸ்தம்பிக்கச் செய்தது தமிழகம். இதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்த கேரளா அதற்குப் பதிலாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளைப் பறித்துக் கொண்டுள்ளது.
இது போதாதென்று திருவனந்தபுரம், பாலக்காடு, மங்களூர் மற்றும் சேலம் கோட்டங்களை உள்ளடக்கி 'வெஸ்ட் கோஸ்ட்' என்ற புதிய ரயில்வே மண்டலத்தை கேரளாவில் அமைக்க வேண்டும் எனவும் அது புதிதாக ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.
இதன் பின்னணியில் மிகப் பெரும் சதித் திட்டம் அடங்கியுள்ளதை காணலாம். இந்தப் புதிய மண்டலம் அமைந்தால் தற்போபாது அமைக்கப்படவுள்ள சேலம் கோட்டத்திற்குட்பட்ட ரயில்வே பகுதிகள் அனைத்தும் மறுபடியும் கேரளாவின் கட்டுப்பாட்டின் கீழ் போக நேரிடும்.
இதனால் சேலம் கோட்டம் அமைந்தும் எந்தப் புண்ணியமும் இல்லை. மறுபடியும் கேரள அதிகாரிகள் வசமே சேலம் கோட்டப் பகுதிகள் சிக்கித் தவிக்க நேரிடும். இன்னும் சொல்லப் போனால் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையிலும் கூட கேரள ரயில்வே அதிகாரிகள் இறங்கலாம்.
இந்தப் புதிய மண்டலத்தின் தலைமை அலுவலகத்தை திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் அமைக்க வேண்டும் எனவும் கேரளா கோரிக்கை வைத்துள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தவிர்கக் தமிழகத்தில் உள்ள ரயில்வே கோட்டங்களை இணைத்து புதிய ரயில்வே மண்டலத்தை உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ரயில்வே மண்டலம் என்றும் அமைக்கலாம் எனவும் யோசனை எழுந்துள்ளது.
முன்பு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகள் தெற்கு ரயில்வேயில் இருந்தது. இதைப் பிரித்து தனியாக தென் மேற்கு ரயில்வே மண்டலத்தை அமைத்தார் அப்போதைய பிரதமராக இருந்த தேவெ கெளடா. இதன் மூலம் கர்நாடகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களும் தென் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகின்றன. மங்களூர் மட்டும் கேரளாவுடன் உள்ளது.
அதேபோல ஆந்திராவில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களும் செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தென் மத்திய மண்டலத்தின் கீழ் வருகின்றன.
ஆனால் தமிழகமும், கேரளாவும் மட்டும் தெற்கு ரயில்வே என்ற ஒரே மண்டலத்தின் கீழ் வருகின்றன. இதுதான் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகியுள்ளது. குறிப்பாக கேரளாவின் சுயநலத்தால் தமிழக ரயில்வே பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
கேரள அதிகாரிகளின் போக்கால் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டத்தின் கீழ் வரும் தமிழகப் பகுதிகள் மிகப் பெரும் தொழில் தேக்கம், வளர்ச்சியின்மையை சந்தித்து வருகின்றன.
இதில் மேற்குப் பகுதியை விட தென் மாவட்டங்ள்தான் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இங்கு ரயில்வே திட்டங்கள் சுத்தமாக இல்லை.
அகல ரயில் பாதை இப்பகுதியில் மிகவும் சொற்ப தூரத்தில்தான் உள்ளது. இந்தியாவின் இறுதிப் பகுதியான கன்னியாகுமரிக்கு அகல ரயில் பாதை இல்லை. இங்கிருந்து சென்னைக்கு வர வேண்டுமானால் கேரளாவைச் சுற்றித்தான் வர வேண்டியுள்ளது. அப்படி ஒரு 'செட்-அப்பை' மலையாளத்து அதிகாரிகள் செய்து வைத்துள்ளனர்.
இதை சரி செய்ய இரண்டு யோசனைகள் தமிழகத் தரப்பிலிருந்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே துறைக்கு முன் வைக்கப்படுகின்றன.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை திருவனந்தபுரத்திலிருந்துப் பிரித்து நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் நெல்லை கோட்டங்களை இணைத்து புதிய ரயில்வே மண்டலத்தை உருவாக்க வேண்டும். நமது ரயில்வேக்கும், கேரளாவுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. கேரளப் பகுதிகளை இணைத்து தனியாக அவர்களுக்கு ஒரு மண்டலத்தை உருவாக்கிக் கொள்ளட்டும் என்பதுதான் அந்த யோசனைகள்.
இவற்றைச் செய்ய அரசியல்வாதிகள் முழு மனதோடு, திறந்த மனதோடு முன்வர வேண்டும். அனைத்து அரசியல்வாதிகளும் ஒற்றுமையோடு, உறுதியோடு இருந்தால் மட்டுமே இதை சாதிக்க முடியும். இதைச் செய்தால்தான் தமிழக ரயில்வே புத்துயிர் பெற முடியும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி பெருகும், தமிழக பயணிகளுக்கும் சிறப்பான ரயில் சேவை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications