போலீஸ் காவலில் கைதி சாவு- சிபிஐ விசாரணை கோரிக்கை
திருநெல்வேலி:
போலீஸ் விசாரணையின் போது கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ போலீசார் விசாரணை நடத்திட கைதியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டையை சேர்ந்தவர் மசூது. ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவருக்கு மனைவி அன்னம்மாள், மகன் உஸ்மான், மகள் ஷகிர்தா பானு ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இவரும் இவரது நண்பர் கல்யாணி உள்பட 4 பேர் கடையநல்லூரில் இருந்து வாடகை காரில் கடந்த 2005ல் ஆரல்வாய்மொழி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை ஒரு வீட்டில் கட்டிப் போட்டு விட்டு காரினை அவர்கள் கடத்தி சென்றனர்.
ஆரல்வாய்மொழி அருகே விருதுநகர் தொழிலதிபர் காரில் பல லட்சம் பணத்தை கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது கடத்தல் கார் மோதி விபத்துகுள்ளாகியது.
இதைப் பயன்படுத்தி கொண்ட அவர்கள் காரில் இருந்த தொழிலதிபரை அரிவாளால் வெட்டி 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்றனர்.
இது குறித்து அப்போதைய ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் லட்சுமணராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தேடுதலில் மசூது, கல்யாணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை போலீசார் குமரி மாவட்டம் கீரிப்பாறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போது மசூது இறந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனால் இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications