பாகிஸ்தான் ராணுவ தளபதியாகும் ஐஎஸ்ஐ தலைவர்
இஸ்லாமாபாத்:
ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகவுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் பர்வேஸ் கியானியை நியமித்துள்ளார்.
இவர் இப்போது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 1999ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீபை கைது செய்துவிட்டு ஆட்சியை பிடித்தார் முஷாரப். ராணுவ தளபதியாக இருந்து கொண்டே அதிபரானார்.
இப்போது மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார் முஷாரப். அவரே தொடர்ந்து ராணுவ தலைவர் பதவியிலும் நீடிக்க திட்டமிட்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தனது வலதுகரமான கியானியை ராணுவ தளபதியாக்க முடிவு செய்துள்ளார்.
கியானிக்கு அமெரிக்காவின் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஐஎஸ்ஐ மூலமாக இந்தியாவுக்கு தொடர்ந்து தலைவலி கொடுத்து வருபவர் கியானி.இந் நிலையில் அவர் ராணுவ தளபதியாகவுள்ளார்.
இதற்கிடையில் அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 85 பேர் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களை சேர்ந்த 125 உறுப்பினர்களும் ராஜினாமா செய்யவுள்ளனர்.
பெனாசிருக்கு பொது மன்னிப்பு:
இந் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு பொது மன்னிப்பு வழங்கவும், அவர் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் பெறவும் முஷாரப் முடிவு செய்துள்ளார்.
மக்களிடையே தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க பெனாசிர் புட்டோவுடன் சமரசத்துக்கு வந்துள்ளார் முஷாரப். அதிபராக தான் தேர்வு செய்யப்படும் அதே நேரத்தில் பெனாசிர் பிரதமராவதில் தனக்கு பிரச்சனையில்லை என்ற முடிவில் அவர் உள்ளார்.
நவாஸ் ஷெரீப் வென்றால் தனக்கு சிக்கலாகிவிடும் என்பதால் பெனாசிருக்கு மறைமுகமாக ஆதரவு தந்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பெனாசிர் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். பெனாசிருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் முஷாரப் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பெனாசிர் வரும் 16ம் தேதி லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்புகிறார். அப்போது அவரை கைது செய்யும் எந்த நடவடிக்கைகளையும் முஷாரப் அரசு மேற்கொள்ளாது.












Click it and Unblock the Notifications