துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்: ஸ்டாலின் நிகழ்ச்சியில் பரபரப்பு!
திருநெல்வேலி:
நெல்லையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டையில், திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சி நடந்த கல்யாண மண்டபத்தில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவரிடம் சோதனை போட்டதில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கூட்டம் நடந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திய போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில், முக்கியப் புள்ளி ஒருவருடன் தான் வந்ததாக தெரிவித்தார்.
இருப்பினும் அந்த நபரை மண்டபத்துக்குள் விடாமல் போலீஸார் வெளியேற்றி விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வந்தபோது ஒரு மர்ம நபர் பெரிய கத்தியுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்தபோது அவரது காருக்குள் ஒரு பெண் அரிவாளுடன் அமர்ந்திருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், துப்பாக்கியுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த நபரால் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications