மதுரை சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை மீனவர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களைப் பார்க்க வந்த மீனவர் அமைப்பின் தலைவர், சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால், சிறைக் காவலர் அவரை சுட்டுக் கொன்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் மதுரை விரைந்துள்ளனர்.

died person with police officialsமதுரை மத்திய சிறைக்கு நேற்று மாலை 3 மணியளவில் ஒருவர் வந்தார். கைதிகளைப் பார்ப்பதற்காக அனுமதிக் கடிதத்தை அவர் வைத்திருந்தார். ஆனால் பார்வையாளர்களுக்கான பகுதி வழியாக செல்லாமல், மெயின் நுழைவாசல் வழியாக செல்ல முயன்றார்.

ஆனால் அவரைத் தடுத்த காவலர் தேவராஜன், இது தடை செய்யப்பட்ட பகுதி, இந்த வழியாகப் போகக் கூடாது, பார்வையாளர் பகுதி வழியாகச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் அந்த நபர் தொடர்ந்து செல்ல முயன்றார். மேலும் கோபத்துடன் தேவராஜன் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றார்.

இதனால் அந்த நபர் வேறு ஏதோ உள்நோக்கத்துடன் வந்திருக்கலாம் என சந்தேகித்த தேவராஜன், மின்னல் வேகத்தில் அந்த நபரை கீழே தள்ளி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்தபோது இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள நெகம்போ பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரது பெயர் வர்ணகுல சூர்ய பெர்னாண்டோ என்பதும் தெரிய வந்தது.

கடந்த ஜூன் மாதம் பெர்னாண்டோவின் படகில், நெகம்போ பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கக் கிளம்பினர். இலங்கை கடல் எல்லையைத் தாண்டி தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெர்னாண்டோ அப்பகுதியில் மீனவர் தலைவராகவும் இருக்கிறார். இதையடுத்து நான்கு மீனவர்களையும் பார்த்து ஜாமீனில் எடுக்கவும், தனது படகை மீட்கவும் சென்னைக்குக் கிளம்பி வந்தார்.

அங்குள்ள இலங்கை துணை தூதரகத்தில் இதற்கான உரிய அனுமதியைப் பெற்றார். பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்திக்கும் அனுமதியையும் பெற்றார்.

இதையடுத்து அவர் மதுரை சிறைக்கு நேற்று வந்துள்ளார். மாலை 3 மணிக்கு அவர் கைதிகளைச் சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. வந்த இடத்தில்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து விட்டது.

பெர்னாண்டோவின் உடலை மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியதால் அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இலங்கைக்குத் திருப்பிச் செல்வதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டையும் பெர்னாண்டோ ஏற்கனவே எடுத்திருந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+