அதிபர் தேர்தலில் முஷாரப் அபார வெற்றி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் பர்வேஸ் முஷாரப் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் இன்று நடந்தது. இத் தேர்தலில் முஷாரப் போட்டியிட்டார். அவர் தவிர பெனாசிர் கட்சி சார்பிலும், வக்கீல்கள் சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். மொத்தம் 5 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால் பெனாசிர் கட்சி, முஷாரப்புக்கு ஆதரவாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டதால் முஷாரப் பெரும் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இன்று காலை அதிபர் தேர்தல் தொடங்கியது. 10 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 3 மணிக்கு முடிந்தது.
நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும், நான்கு மாகாண சட்டசபை உறுப்பினர்களும் இத் தேர்தலில் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் குவாசி முகம்மது பரூக் வாக்கு எண்ணிக்கை குறித்துக் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்த 257 வாக்குகளில் 252 ஓட்டுக்கள் முஷாரப்புக்குக் கிடைத்தது. வக்கீல்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வஜூதின் அகமதுவுக்கு 2 ஓட்டுக்கள் கிடைத்தன. 3 ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றார்.
இதேபோல சட்டசபை உறுப்பினர்களின் வாக்குகளிலும் பெரும்பாலான வாக்குகள் முஷாரப்புக்கே கிடைத்துள்ளன. இதுகுறித்த விரிவான விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருக்கும் நிலையில் அதிபர் தேர்தலிலும் முஷாரப் போட்டியிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
மேலும், தேர்தல் நடத்தலாம் எனவும், ஆனால் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றைய தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கு வருகிற 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான் முஷாரப் வெற்றி குறித்து உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு:
இன்றைய ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பிக்கள் புறக்கணித்தனர். இதன் மூலம் முஷாரப்புக்கு அவர்கள் மறைமுகமாக ஆதரவு அளித்தனர்.
அதேசமயம், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டதால், அவர்களும் வாக்களிக்கவில்லை.
இத்தனை புறக்கணிப்பு இருந்தாலும் கூட, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலம் வெற்றிக்குப் போதுமானது என்பதால் முஷாரப் வெற்றி உறுதியாகியிருந்தது.
வக்கீல்கள் போராட்டம்:
இதற்கிடையே, இன்றைய ஓட்டெடுப்பைக் கண்டித்து கராச்சி, லாகூர், பெஷாவர், குவெட்டா ஆகிய நகரங்களில் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பெஷாவரில் நடந்த போராட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர். வக்கீல்கள், முஷாரப்பின் கொடும்பாவியையும் எரித்தனர்.
பிரதமர் மகிழ்ச்சி:
தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் செளகத் அஜீஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த அரசும், இந்த அரசின் கொள்கையும் தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதையே இது காட்டுகிறது. தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தது சந்தோஷம் தருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications