தேர்தல் வந்தால் சந்திக்கத் தயார் - சோனியா
டெல்லி:
இடைத் தேர்தல் வந்தால் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி பயப்படாது. தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இப்தார் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சோனியா காந்தி பேசுகையில், தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி பயப்படாது. தேர்தலை சந்திக்க நாங்கள் தயாரகவே இருக்கிறோம். மக்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பயப்படாது.
மத்திய அரசின் எதிர்காலம் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பயமும், கவலையும் இல்லை என்றார்.
சோனியாவின் கருத்தை மன்மோகன் சிங்கும் எதிரொலித்தார். அவர் கூறுகையில் தவிர்க்க முடியாதது என்று எதுவும் இல்லை. இடைத் தேர்தலுக்கும் அது பொருந்தும்.
அணு சக்தி ஒப்பந்தம் காரணமாக இடதுசாரிகளால் அரசுக்கு எந்த மிரட்டலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்கிறது. பேச்சுவார்த்தை முடியும் வரை நல்லதையே நினைப்போம் என்றார் அவர்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய கூட்டணி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று இடதுசாரிகள் மிரட்டி வரும் நிலையில் இடைத் தேர்தலை சந்திக்கத் தயார் என சோனியாவும், மன்மோகன் சிங்கும் தடாலடியாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications