17 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்
திருநெல்வேலி:
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தவும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி அவர்கள் வளர்ச்சி திறனை ஊக்கப்படுத்தவும் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களிடையே அடைவு திறன் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குறையை நீக்கி செயல்வழி கற்றல், படைப்பாற்றல் மூலம் மாணவர்களின் அடைவு திறன் குறைபாட்டினை நீக்கிவிடலாம்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 ஆயிரம் ஆசிரியர்கள் நவம்பர் 15ம் தேதிக்குள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில் பதவி உயர்வு, புதிய நியமனம் என 17 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இப்பணியிடங்கள் முறைப்படி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
420 மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.350 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளன. தமிழகத்தில் 1880 மேல் நிலைப் பள்ளிகளுக்கு ரூ118 கோடியில் கம்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications