சேது சமுத்திரத் திட்டமும் பலன்களும்-கருணாநிதி முழு விளக்கம்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக எந்த பிரதமரிடமாவது தமிழக முதல்வர் கருணாநிதி எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால் பொது வாழ்வை விட்டே விலகி விடுவதாக அறிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த மூன்று நாட்களாக இதே செய்தியை இவர் பேசி வருகிறார். முதல்நாள் அந்தச் செய்தி வந்த போதே அதனை மறுக்க நினைத்து, பின்னர் அவர் அரசியலை விட்டுப் போய்விட்டால் என்ன செய்வதென்று எண்ணி, மறுக்காமல் இருந்தேன்.

ஆனால் தொடர்ந்து அந்த சவால் படலம் தொடர்வதால், நான் சேது சமுத்திரத் திட்டத்திற்காக பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதத்தை மட்டுமல்ல. இரண்டு கடிதங்களை ஆதாரத்துடன் இங்கே வெளியிடுகிறேன். இதை நான் வெளியிடுவது வைகோ அரசியலை விட்டு விலக வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்ல.

இதன் பிறகாவது அவர் தன்னைத் திருத்திக் கொண்டு சேது சமுத்திர திட்டம் எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, நுனிப்புல் மேய்வதைப் போல எதற்கொடுத்தாலும் சவால் விடுவதை நிறுத்திக் கொள்ள முன்வர வேண்டுமென்றுக் கோருகிறேன்.

கடந்த 2002 மே மாதம் 8ம் தேதி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி நான் எழுதிய கடிதம் பின்வருமாறு,

தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையான சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன். திமுக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கிட்டத்திட்ட அரை நூற்றாண்டு காலமாக வலியுறுத்தி வருகிறது. நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இது குறித்து வலியுறுத்தி உள்ளேன்.

சேது சமுத்திரத்தின் ஒரு பிரிவாக உள்ள தூத்துக்குடி திட்டம், சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கோரி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறிவித்தார்.

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்ற சிறப்பைப் பெறும் என்பதை அறிந்து இந்த திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் இத்திட்டம் நீண்டநாளாக கிடப்பில் போடப்பட்டது என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

மத்தியில் ஆளும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இத்திட்டத்தை நிறைவேற்றிடவும், இந்த திட்டத்தின் சாத்திய கூறுகளை ஆராய பண ஒதுக்கீடு செய்தது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆனால் இந்த சேது கால்வாய் திட்டம் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இக்கடிதம் மூலமாக தங்களை வலியுறுத்துகிறேன். சேது கால்வாய் பற்றிய விவரங்களையும் அதனால் பொதுவாக இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு ஏற்படும் பயன்களையும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

சேதுக்கால்வாய் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தில் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். இந்த திட்டத்தை ஆங்கில அரசாங்கத்தில் கப்பல் படையைச் சேர்ந்த கமாண்டர் டெயிலர் என்பவர் 1860ம் ஆண்டு உருவாக்கினார். அன்றைக்கு அதனுடைய மதிப்பீடு ரூ.50 லட்சமாகும்.

பிரபு டவுண்ட்ஸ்டன் மற்றும் சர் ஜான்கூடே என்பவர்கள் இத்திட்டத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து, இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனப் பல வழிகள் வகுத்தனர். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மறுபடியும் 1921ம் ஆண்டு சென்னை மாநில அரசு இத்திட்டத்தை வகுத்தும், ஆங்கில ஆட்சியாளர்களின் உதவி கிடைக்காததால் நிறைவேற்றப்படவில்லை.

1945ம் ஆண்டு மறுபடியும் ஆங்கில அரசாங்கம் இத்திட்டத்தைப் பற்றி அறிய ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழு சார்பாக இது குறித்து அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு 1955ம் ஆண்டு டாக்டர் சர்.ஏ.ராமசாமி முதலியார் தலைமையில் சேதுக் கால்வாய் பரிசீலிக்க ஒரு குழு இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால், இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியும், கிழுக்கு கடற்கரையோரமாகக் கப்பல் போக்குவரத்தும் எளிதாக இருக்கும் என்று இக்குழு தனது அறிக்கையில் கூறியதுடன், உடனே இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனவும் தெளிவாக இந்திய அரசுக்கு தெரிவித்தது. அதற்கு ரூ.9.98 கோடி திட்ட மதிப்பையும் அக்குழு வெளியிட்டது.

சர்.ஏ.ராமசாமி முதலியார் குழுவில் அறிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய அரசாங்கம் விட்டு விட்டது. கடந்த 1963ம் ஆண்டு இந்திய அரசாங்கம் 4வது திட்டக் காலத்தில் இந்த சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென முடிவு செய்தும், இத்திட்டம் செயல்வடிவம் பெறாமல் போய்விட்டது.

அதன்பிறகு 1963ல் டாக்டர் நாகேந்திர சிங் குழுவும், 1965ல் சி.வி.வெங்கடேஸ்வரன் குழுவும் அமைக்கப்பட்டது. இதில் சி.வி.வெங்கடேஸ்வரன் தலைமையில் ஒரு குழு இந்த திட்டத்தை அறிய நியமிக்கப்பட்டது. இந்த குழு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற 37 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வருடத்திற்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறியது.

அதன்பிறகு இறுதியாக எச்.ஆர்.லட்சுமிநாராயணன் தலைமையில் ஐவர் குவு ஒன்றும், மத்திய அரசால் கடந்த 1981-82ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இக்குழு தமிழகமெங்கும் சென்று இத்திட்டத்திற்கான பல்வேறு தரப்பினர்களுடைய கருத்துக்களையும் கேட்டபின்னர், இந்த திட்டத்தின் பயனைப் பற்றி 1981-82ம் ஆண்டு மத்திய அரசின் குழு கீழ்க் குறிப்பிட்டவாறு ஆராய்ந்து மதிப்பிட்டது.

1. இந்தியாவில் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல்வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும், வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல்வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும் தூத்துக்குடியிலிருந்து கீழ்க்கண்ட துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.

அ. தூத்துக்குடியிலிருந்து சென்னை-434 மைல்கள் மிச்சப்படும் தூரமாகும்.

ஆ. தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டனம் - 376 மைல்கள் மிச்சப்படும் தூரமாகும்.

இ. தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா 340 மைல்கள் மிச்சப்படும் தூரமாகும்.

இந்த கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலில் எரிபொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவில் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் மிச்சப்படும்.

இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்த கால்வாயின் மூலம் தமிழகத்தில் குளச்சல், முட்டம், பாண்டிச்சேரி, விசாகப்பட்டனம், சென்னை மற்றும் கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரை துறைமுகங்கள் வளர்ச்சியடையும்.

இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடி துறைமுகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுவதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும். இந்தியாவின் தென்பகுதியில் அன்னிய சக்திகள் ஊடுருவாமல் அது ஒர் அரணாக விளங்கும்.

சேது கால்வாயின் மூலம் மீன்பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாக திகழும். நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட, உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருட்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால் தற்போது கப்பல்கள் எல்லாம் இலங்கையைச் சுற்றி செல்கின்றன. இதனால் புயல் அபாயங்களில் சிக்கி கொள்ள நேர்கின்றது. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகில் பல பகுதிகளிலிருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவில் வளர்ச்சியை அதிகரிக்கும். இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் 10 அல்லது 12 ஆண்டுகளில் ஈடு செய்து விடலாம். இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தில் 1981-82ம் ஆண்டில் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

எனவே இந்த திட்டத்தை தொடங்கும் நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்வதற்கு என்று குறிப்பிட்ட தொகையை ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு இனியும் தாமதம் செய்யாமல் இத்திட்டத்தை தொடங்கி அமல்படுத்த வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய கப்பல் துறை அமைச்சகம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சேதுக் கால்வாய் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை வழங்கிடும்படி அறிவுறுத்தியுள்ளது.

எனவே அந்நிறுவனம் உடனே தனது ஆய்வை தொடங்கி விரைவுபடுத்திட தாங்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். பொருளாதார ரீதியாக எப்படியெல்லாம் இத்திட்ட தாமதத்தினால் இழப்பு ஏற்படுகிறது என்பதை என்னுடைய கடிதம் மூலம் தாங்கள் அறிவீர்கள்.

எனவே பொருளாதார வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகள் வழங்கிடும் இந்த திட்டத்தை நாட்டினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமதமில்லாமல் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஒரு கடிதம் மட்டுமல்ல, கடந்த 15-10-2002 அன்று மீண்டும் பிரதமர் அவர்களுக்கு மே 8ம் தேதி எழுதிய கடிதத்தை நினைவூட்டி, அந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன். அதன் நகலும் இந்த இதழில் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிறகாவது உண்மை என்ன, பொய் என்ன என்பதை சவால் விட்ட நண்பரும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போரும், நடுநிலையாளர்களும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த சேது சமுத்திர திட்டம் பற்றியும், அதிலே எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்தும் தொடர்ந்து எழுதுவேன் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+