இசைக்கு பல்கலைக்கழகம்-கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
இசைஞானி இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று இசைக்கென தனி பல்கலைக்கழகழகம் அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி 33 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை 'சாரபள்ளம் சாமுண்டி'. இப்படம் தற்போது 'உளியின் ஓசை' என்ற பெயரில் திரைப்படமாகிறது. இளவேனில் இப்படத்தை இயக்கவுள்ளார்.
வினீத் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லா, அக்ஷயா ஆகியோர் நடிக்கிறார்கள் இப்படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்து, பாடல் பதிவையும் தொடங்கி வைத்தார். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், சாரப்பள்ளம் சாமுண்டி கதையை படமாக்க வேண்டும் என்று பலமுறை முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நன்றாகத்தான் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது.
இந்தக் கதை எனக்கு மனப்பாடமாகி விட்ட ஒன்று. அதனால்தான் இப்படம் குறித்து என்னிடம் வந்தபோதே நான் கதையைக் கூட கேட்காமல் இசையமைக்க ஒப்புக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இந்த உலகில், எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இசைக்கென ஒரு சர்வகலாசாலையை நிறுவ வேண்டும். இது எனது ஆசை. இதை கலைஞர் அவர்கள் நிறைவேற்றித் தர வேண்டும்.
நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, வீணை தனம்மாள், புல்லாங்குழல் மாலி ஆகியோர் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் கலைப் பொக்கிஷங்கள் எங்கே உள்ளன. இவற்றை எல்லாம் சேகரித்து சர்வகலாசாலையை உருவாக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் மும்மூர்த்திகளில் பெரியார், அண்ணாவை அடுத்து மூன்றாவது மூர்த்தியான கலைஞர் அவர்கள், இந்த இசை சர்வகலாசாலையை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று இசைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
முதல்வர் கருணாநிதி பேசுகையில், சாரப்பள்ளம் சாமுண்டி கதையை படமாக்க வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் இளையராஜா கூறியிருந்தார். நானும் நன்றாகத்தான் இருக்கும் என்று எனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தேன்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, நிறைவேறாத அவருடைய ஆசையும், எனது ஆசையும் இன்றைய தினம் நிறைவேறியிருக்கிறது.
உளியின் ஓசை என்கிற சரித்திரம் தொடர்பான படத்தை எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு சமூகப் படத்தை எடுப்பதை விட பல மடங்குத் தயாரிப்புச் செலவு இதற்காகும். இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன்.
மனோகராவுக்குப் பிறகு கலைஞர் எழுதுகிற சரித்திரம் சார்ந்த கதை இது என்று ஏவி.எம். சரவணன் கூறினார். ஆனால் மனோகராவுக்குப் பிறகு பூம்புகார் வந்ததை அவருக்கு இங்கே நினைவூட்டுகிறேன். அதற்குப் பிறகு குறவஞ்சி, காஞ்சித் தலைவன் ஆகிய படங்கள் எல்லாம் சரித்திரம் சார்ந்த படங்களாக வந்தன.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருடைய பின்னணியை வைத்து உருவானது தஞ்சை கோபுரம், கங்கை கொண்ட சோழபுரம் - இவை எல்லாம் பின்னணியாக அமைய, இந்த சிற்பக் கூடத்தை ஒரு கதைக் கருவாக வைத்து, ஒரு சிற்பியையும், சாமுண்டி என்ற ஒரு பெண்ணையும் முறையே கதாநாயகர், கதாநாயகிகளாக ஆக்கி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இது ஒரு கலைப்படமாகவே அமையும். இதில் கருணாநிதியின் வசனங்களை மாத்திரம் நம்பி வருகிற படமாக அமையாமல், கதையை நம்பி, நடனத்தை நம்பி, இளையராஜாவின் இசையை நம்பி, இளவேனில் ஆற்றலை நம்பி வெளி வருகின்ற படமாகும்.
நம்முடைய வரலாற்றை நாம் பதிய வைக்கத் தவறி விடுகிறோம். அது ஏதோ சுய நல விளம்பரமாகி விடும் என்று கருதி அதை எழுதி வைக்காமல், அதை வெளிப்படுத்தாமல் இருந்து விடுகின்ற காரணத்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இருக்க வேண்டிய வரலாற்று உண்மைகள் மறைந்து விடுகின்றன.
அப்படி மறையாமல் காக்கப்பட வேண்டிய ஒன்று நிலைமையில்தான் கல்வெட்டுக்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இப்போது சொல்கிறோமே உள்ளாட்சித் தேர்தல்களை நாம் நடத்துகிறோம் என்றால் அதற்கு அடிப்படை எது என்று கண்டுபிடிக்கிறோம்.
உத்தரமேரூரில் இருக்கின்ற கல்வெட்டுதான் தமிழ்நாட்டில் பராந்தகச் சோழன் காலத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் எப்படி நடைபெற்றது என்பதை இன்றைக்கும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
தஞ்சைக் கோவில் கோபுரத்திற்கு பக்கத்திலே இருக்கிற பகுதியில் நடனக் கலையில் உள்ள கரணங்கள் 108 இருப்பதற்குப் பதிலாக 81 தான் இருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய, என்ன காரணத்தால் மீதமுள்ள இருபதுக்கு மேற்பட்ட கரணங்கள் இதிலே செதுக்கப்படவில்லை என்ற கேள்விக்குக் கிடைத்த பதில்தான் இந்த உளியின் ஓசை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜா இங்கே ஒரு கோரிக்கை வைத்தார். பொதுவாக அரசு விழாக்களில்தான் கோரிக்கை வைப்பார்கள். இது அரசு விழா அல்ல. இருந்தாலும் அரசுக்குத் தொடர்புடைய கோரிக்கையைத்தான் அவர் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இசைப் பல்கலைக்கழகம் வேண்டும் என்றார். அதற்கு இசைவு தெரிவிக்கிறேன்.
அந்தப் பல்கலைக்கழகம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல், அகில உலகத்திற்கும் பயன்படும் வகையில் அதை அமைத்துக் கொடுப்பேன். அதற்கு வலிமை சேர்க்கும் பொறுப்பை நானும், எனக்குத் துணையாக இளையராஜாவும் ஏற்றுக் கொள்வோம் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் பட அதிபர்கள் ஏவி.எம். சரவணன், ராம.நாராயணன், கவிஞர் வாலி, நடிகை மனோரமா உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications