தொடரும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்!
சென்னை:
ஈவ் டீசிங் செய்ததைத் தட்டிக் கேட்ட தலைமைக் காவலரை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கியதால் சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினரும், சட்டத்துறையினரும் எப்போதும் எலியும், பூணையுமாக இருப்பது வழக்கமாகி விட்டது. இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் மூள்வது வழக்கமானதுதான். ஆனால் சென்னையில் சமீப காலமாக சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வக்கீல்களால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் வக்கீல்கள் இருவருக்கும், தலைமைக் காவலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினருமே மறு தரப்பினர் மீது பரஸ்பரம் புகார் கூறியுள்ளனர்.
இந்த பிரச்சினையால் கடந்த ஒரு வாரமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், புரசைவாக்கம் பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் நடத்திய பயங்கர தாக்குதலில் உதவி ஆணையரே அடிபடி வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
உதவி ஆணையரை மட்டும் இல்லாமல், காவலர்களையும் தாக்கிய அந்த மாணவர்கள், காவல்துறையினரின் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.
சில தினங்களுக்கு முன்பு பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு அப்பாவி மாணவனை போலீசார் மீட்டனர். பாதுகாப்புக்காக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
ஆனால் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த 50 சட்ட கல்லூரி மாணவர்கள், போலீஸார் தடுத்தும் அதை மீறி அந்த மாணவனை கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து காவல்துறையினர் மீது வக்கீல்களும், சட்ட மாணவர்களும் நடத்திய இந்தத் தாக்குதலால் சென்னை காவல்துறை வட்டாரம் கொதித்துப் ேபாயுள்ளது.
இந்த நிலையில், பாரிமுனை, எஸ்பிளனேடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் தலைமைக் காவலர் ஆகிேயாரை சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈவ் டீசிங்கைத் தட்டிக் கேட்டதால் காவல்துறையினருக்கு இந்தப் பரிசைக் கொடுத்துள்ளனர் சட்டக் கல்லூரி மாணவர்கள்.
பாரிமுனை பஸ் நிலையத்தில் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கும் கார்த்திகேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோர், தங்களுடன் வேலை பார்க்கும் ஆண் நண்பர் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 5 சட்டக்கல்லூரி மாணவர்கள் அந்த பெண்களை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். தட்டி கேட்ட வாலிபரை தாக்கி உள்ளனர். அதோடில்லாமல் அந்த பெண்களிடமும் மிகவும் மோசமாக நடந்து கொள்ள முயன்றனர்.
இதைப் பார்த்து பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து தங்களிடம் உள்ள செல்போன் மூலம் சக மாணவர்களுக்குப் போன் செய்து வரவழைத்தனர். இதனால் அங்கு மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் மூளும் சூழல் எழுந்தது.
இதையடுத்து அங்கு எஸ்பிளனேடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் ஏட்டு ஆகியோர் விரைந்து வந்தனர்.
அவர்கள் ஈவ் டீசிங்குக்கு ஆளான பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சில மாணவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனையும், ஏட்டையும் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஆனால் பிரச்சினையை அப்படியே விட்டு விடுமாறும், வழக்கு பதிவு செய்ய வேண்டாம் எனவும் உயர் அதிகாரிகள் கூறியதால், எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்ய முடியாமல் கொதிப்புடன் உள்ளனர்.
வக்கீல்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக உயர்நீதிமன்றம் அருகே உள்ள பாரிமுனைச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதையும் வக்கீல்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இதனால் அந்த சாலைய பயன்படுத்தும் பொதுமக்களும், வாகனதாரிகளும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். இதைத் தட்டிக் கேட்கவோ, தடுக்கவவோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வக்கீல்களின் போக்கினால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அதிருப்தி ஆவேசமாக மாறும் முன்பே இப்படிப்பட்ட போராட்டங்களை தவிர்க்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications