ஆனந்த் வரவேற்பில் அமளி
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று தாயகம் திரும்பிய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு டெல்லி விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பின்போது பெரும் அமளி ஏற்பட்டதால், ஆனந்த் அப்செட்டாகி அங்கிருந்து விருட்டென புறப்பட்டுச் சென்றார்.
சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஆனந்த் பட்டம் வென்றார். அவர் உலக செஸ் சாம்பியனாவது இது 2வது முறையாகும்.
ஆனந்த் நேற்று நள்ளிரவில் டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்காக இந்திய செஸ் சங்கம் பெரும் திரளானவர்களை வரவழைத்திருந்தது. மேலும் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், டிவி கேமராமேன்கள் மற்றும் ரசிகர்களும் திரண்டிருந்தனர்.
ஆனந்த் விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவரை வரவேற்க அனைவரும் கும்பலாக ஓடினர். இதனால் ஆனந்த் அவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார்.
அனைவரும் முண்டியடித்துக் கொண்டு கை குலுக்கவும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவும் போட்டியிட்டனர். மேலும் பலர் ஆனந்த்தைத் தொட்டு தங்கள் பக்கம் திரும்புமாறு கோரினர். இதனால் ஆனந்த் பெரும் அப்செட் ஆனார்.
சம்பவ இடத்தில் இருந்த போலீஸாரால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கூட்டத்தில் சிக்கித் தவித்தார் ஆனந்த். பின்னர் அவரை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரும் சிரமப்பட்டு ஆனந்த்தை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்திற்கு வந்ததும் பேட்டி அளிப்பதாக ஆனந்த் அறிவித்திருந்தார். ஆனால் வரவேற்பு என்ற பெயரில் அனைவரும் கும்பலாகப் போய் கோமாளித்தனம் செய்ததால் அப்செட் ஆன ஆனந்த் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காமலேயே அங்கிருந்து கிளம்பிப் போனார்.
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை வென்று திரும்பிய இந்திய அணியை, சிறப்பான ஏற்பாடுகள் செய்து வரவேற்றது இந்திய கிரிக்கெட் வாரியம். அதேபோல ஆனந்த்தையும் சிறப்பான முறையில் செஸ் சங்கம் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் இந்திய செஸ் சங்கம் செய்திருந்த வரவேற்பு ஏற்பாடுகள், ஆனந்த்தை பெரும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.












Click it and Unblock the Notifications