போலி பாஸ்போர்ட் பெற முயன்ற 3 பேர் கைது
திருச்சி:
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில், போலி ஆவணங்களைக் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்ற பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ரீனா என்ற தஸ்லிமா மரியம். இவர் தட்கல் முறையில் உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கடந்த 8ம் தேதி ஆவணங்களுடன் வந்தார்.
அவர் கொண்டு வந்த ஆவணங்களை பரிசீலித்த அலுவலக ஊழியர்கள் அது போலி எனக் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ரீனாவைக் கைது செய்தனர்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ரீனா கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தாரிக் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உசேன் துபாயில் வேலை பார்க்கிறார். ரீனாவும் துபாய் செல்ல முடிவு செய்தார்.
ஆனால் அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளம்பரிதி என்ற ஏஜெண்டை நாடினார்.
இளம்பரிதி, அவரது நண்பர்கள் சிவக்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் ரீனாவிடம் ரூ.25,000 பணம் வாங்கிக் கொண்டு போலி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை தயாரித்து கொடுத்துள்ளனர்.
பின்னர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான விஜய நிர்மலா, துரைராஜ் ஆகியோரை ரீனா அணுகினார். அவருக்கு போலி ஆவணங்களைக் கொண்டு பாஸ்போர்ட் வழங்க அவர்கள் சம்மதித்தனர். இதற்காக கணிசமான பணத்தையும் வாங்கியுள்ளனர்.
இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து செந்தில்குமார், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் துரைராஜ், விஜயநிர்மலா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications