சென்னையில் உச்சநீதிமன்ற கிளை-அரசு மீண்டும் வலியுறுத்தல்
சென்னை:
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைப்பது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் கிளையை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
ஆனால் இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அனைத்து நீதிபதிகள் அடங்கிய முழு பெஞ்ச், உச்ச நீதிமன்றத்திற்கு டெல்லியை தவிர வேறு எங்கும் கிளைகள் அமைக்க முடியாது என்று முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு தெரிவித்தது.
இருப்பினும், மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு சார்பாக, மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வரைவுக் கடிதம், முதல்வரின் பார்வைக்கு கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications