பாழடைந்த ஹவுஸிங் போர்டு வீடுகளை காலி செய்ய உத்தரவு
கோவை:
கோவையில் பாழடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளில் குடியிருப்போர் அந்த வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை உக்கடத்தில், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு இடிந்து விழுந்து 13 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கோவை நகரில் உள்ள, பாழடைந்த நிலையில் காணப்படும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் வசிப்பவர்களைக் காலி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன வீடுகளைக் காலி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். சித்தாபுதூர், வட கோவை, பாளையம் தோட்டம், வின்சென்ட் சாலை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 650 வீடுகள் மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. மேலும் நேரடியாக சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று ஒலிபெருக்கி மூலமும் காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நேற்றும் இடிந்த வீடுகள்:
இந்த நிலையில், வட கோவை, காமராஜர்புரத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ஏ பிளாக்கில் உள்ள 5 மற்றும் 6 ஆகிய மாடிகளின் பால்கனி திடீரென நேற்று இடிந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து இந்த கட்டடத்தை இடித்து தள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் இன்று காலை தொடங்கின. பொக்லைன் வாகனம் மூலம் இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
