தமிழகம் முழுவதும் தொடர்கிறது கன மழை- திரும்பி வந்த கோவை விமானம்
சென்னை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இதனால் மழைக் காலம் என சொல்லப்படும் ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை வெயில் தான் வாட்டி எடுத்தது.
இந் நிலையில் வடகிழக்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. கடலோர பகுதிகள் தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது
சென்னையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந் நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழையால் திரும்பி வந்த கோவை விமானம்:
இதற்கிடையே நேற்றிரவு சென்னையிலிருந்து கோவை சென்ற டெக்கான் (ஏர் டெக்கான்) விமானம் கன மழையால் அங்கு தரையிறங்க பலமுறை முயன்றும் முடியாமல் போகவே பெங்களூருக்கத் திருப்பிவிடப்பட்டது.
கோவையில் பெய்த கன மழையால் அந்த விமானாத்தால் தரையிறங்க முடியவில்லை. 54 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் இதையடுத்து பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. பின்னர் அந்த விமானம் சென்னைக்கு திரும்பியது.












Click it and Unblock the Notifications