வீழ்ச்சியை நோக்கி ஆஸி. பிரதமர் ஹோவர்ட்
சிட்னி: தனது அரசியல் வரலாற்றில் பெரும் தோல்வியை சந்திக்கும் அபாயத்தில் இருக்கிறார் பிரதமர் ஜான் ஹோவர்ட்.
ஜான் ஹோவர்ட்டுக்கு பல முனைகளிலும் கெட்ட பெயர். அவருடைய செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய டாக்டர் முகம்மது ஹனீப்பைக் கைது செய்த விவகாரத்தில் ஹோவர்ட்டின் புகழ் பெருமளவு சரிந்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் ஹோவர்ட்டின் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும், ஆட்சியை இழக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்ேபாது ஹோவர்ட்டின் எம்.பி. பதவிக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள பென்னிலாங்தான் ஹோவர்ட்டின் தொகுதியாகும். இங்கு இவரது செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளதாம். ஹோவர்ட்டின் நிலைமை இந்த அளவுக்கு ஆனதற்கு முக்கியக் காரணம் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து விட்ட ஆசியர்களின் எண்ணிக்கையும் காரணம். அவர்களில் முக்கால்வாசிப் பேர் ஹோவர்ட்டுக்கு எதிராக உள்ளனராம்.
வாக்காளர்களில் கணிசமானவர்களாக கொரியர்களும், சீனர்களும் உள்ளனர். அதாவது 20 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களின் ஓட்டுக்கள் ஹோவர்ட்டுக்குக் கிடைக்காது என்கிறார்கள்.
நவம்பர் 24ம் தேதி நடக்கும் தேர்தலில் ஐந்தாவது முறையாக போட்டியிடவுள்ளார் ஹோவர்ட்.
கொரிய செய்தித் தாளான ஹோஜு தோன்ஜோவின் ஆசிரியர் ஜேசன் கோ இதுகுறித்துக் கூறுகையில், இனவாதத்தை மையப்படுத்தி தேர்தலில் நிற்கிறார் ஹோவர்ட். இப்படிப்பட்ட தலைவர் எங்களுக்குத் தேவையில்லை.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் இப்படித்தான் இன வாதத்தைப் பயன்படுத்தி ஜெயித்தார் ஹோவர்ட். ஆனால் இந்த முறை அது நடக்காது என்றார் கோ.
இந்தத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஹோவர்ட்டுக்கு எதிராக, எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் டிவி பத்திரிக்கையாளரான மேக்ஸின் மெக்கியூதான் அந்த வேட்பாளர்.
இவர் பென்னிலாங் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் கடந்த 1974ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் ஹோவர்ட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு அவரது செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது.
இவருக்கும், மெக்கியூவுக்கும் இடையே கிட்டத்தட்ட 4000 ஓட்டுக்கள்தான் வித்தியாசம் இருப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இது ஹோவர்ட்டுக்கு பெரும் ஆபத்தானதாகும் என ஆஸ்திரேலிய மீடியாக்கள் கணித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்புதான் மெக்கியூ தேர்தல் களத்தில் குதித்தார். தற்போது கருத்துக் கணிப்புகளிலும், சூதாட்ட வட்டாரங்களிலும் அவர் ஹோவர்ட்டை முந்திக் கொண்டிருக்கிறார்.
ஆட்சியை இழக்கும் அபாயம் மட்டுமல்லாது, எம்.பி. சீட்டையும் இழக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டிருப்பதால் பென்னிலாங் தொகுதி மக்களை தாஜா செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார் ஹோவர்ட். தொகுதிக்கு தான் செய்த நல்லதை நம்மூர் அரசியல்வாதிகள் போல ஞாபகப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
மேலும் தனது தேர்தல் உத்திகளிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார். வெற்றி பெறுவதற்காக நிறைய பணத்தை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளார். தொகுதிப் பக்கம் அடிக்கடி போகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கெல்லாம் மறக்காமல் தனது தொகுதிப் பாசத்தை வெளிப்படுத்தி பேசவும் செய்கிறார்.
'ரவுடி ரேலி':
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த கிரானி ஸ்மித் ஆப்பிள் திருவிழாவின்போது ஹோவர்ட் கட்சியினரும், மெக்கியூ கட்சியினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் நம்மூர் அரசியல்வாதிகள் போல தாறுமாறாக பேசி சரமாரியாக வாய்ச் சண்டையில் ஈடுபட்டனர்.
வழக்கமாக இந்த திருவிழா பெரிய அளவில் பேசப்படுவதில்லை. ஆனால் இது தேர்தல் காலம் என்பதால் இந்த விழா முக்கியத்துவம் பெற்றது. இந்த விழாவில் ஹோவர்ட்டும், மெக்கியூவும் கூட கலந்து கொண்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த விழா பக்கம் கூட எட்டிப் பார்க்காத ஹோவர்ட் முதல் முறையாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு கட்சிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கையில் தட்டிகளுடன் கலந்து கொண்டனர். அப்போது இரு தரப்பினரும் சரமாரியாக வாய்ச் சண்டையில் ஈடுபட்டனர். இதை ரவுடி ரேலி என்று ஆஸ்திரேலியப் பத்திரிக்கைள் வர்ணித்துள்ளன.
இந்த விழாவில் ஹோவர்ட் கலந்து கொண்டதையும் மீடியாக்கள் விமர்சித்துள்ளன. இதுவரை செய்திராத பல விஷயங்களை இப்போது செய்ய ஆரம்பித்துள்ளார் ஹோவர்ட். பெரும் அபாயத்தில் இருப்பதை அவர் இப்போது உணர்ந்துள்ளார் என்று அவை கூறுகின்றன.
பென்னிலாங்கின் வரலாறு:
ஹோவர்ட்டின் தொகுதியான பென்னிலாங்குக்கு பெரிய வரலாறே உள்ளது. இந்தப் பகுதி சிட்னி நகரின் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது. பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி பென்னிலாங். பென்னிலாங் என்பவரின் பெயர்தான் இந்த பகுதிக்கும் சூட்டப்பட்டுள்ளது.
ஹோவர்ட் இத்தொகுதியில் முதல் முறை வென்றபோது நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் அதிகம் இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டுகளில் இந்தப் பகுதியின் நிலைமை மாறிப் போனது. பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியாக மாறி விட்டது.
தற்போதைய ஆஸ்திரேலிய தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக முன் வைக்கப்படுபவை பொருளாதார சீர்திருத்தம், ஈராக் போரில் ஆஸ்திரேலியாவின் பங்கு, புதிய பணி சட்டம் உள்ளிட்டவைதான்.
இனவாதப் பிரச்சினையும் முக்கியமாக உள்ளது. பென்னிலாங் தொகுதியில் 12 ஆயிரம் சீனர்களும், 5000 கொரியர்களும் உள்ளனர். இவர்களின் ஓட்டுக்கள் நிச்சயம் ஹோவர்ட்டுக்குக் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இத்தொகுதியில், உள்ள வாக்காளர்களில் பாதிப்பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் வெளிநாட்டுக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1988ம் ஆண்டு ஹோவர்ட் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆசிரியர்களை கடுமையாக விமர்சித்துப் பேசியதை பென்னிலாங் தொகுதி ஆசிய வாக்காளர்கள் இன்னும் மறக்கவில்லை.
பிரித்தாளும் சூழ்ச்சிதான் ஹோவர்ட்டின் முக்கிய பாலிசியாக உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவை எல்லாம் ஒன்று சேர்ந்து ஹோவர்ட்டை இந்தத் தேர்தலில் பெரும் தோல்விக்கு ஆளாக்கப்
போவதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக உள்ள சீனர்களும், கொரியர்களும் ஹோவர்ட்டுக்கு எதிராக இருப்பதால் அவரது தோல்வி உறுதியானது என்று ஆஸ்திரேலியாவில் பேச்சு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications