தமிழகம் முழுவதும் கன மழை - 4 பேர் பலி காவிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டனம்: காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த புயல் சின்னம் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே நிலை கொண்டு அங்கேய இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டனம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இங்கு பல இடங்களில் நாற்று நடப்பட்டுள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கி விட்டன. அறுவடை செய்யப்படாமல் உள்ள பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மதுரையில் கன மழை:
மதுரையில் நேற்று கன மழை பெய்தது. இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியதால் மதுரையே ஸ்தம்பித்துப் போனது.
திங்கள்கிழமை மாலை முதல் மதுரையில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 75.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் மதுரையில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
தொடர் மழை காரணமாக வைகை அணை மற்றும் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ராமநாதபுரத்தில் ...
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. மண்டபம் பகுதியில், கனத்த மழை கொட்டியதால் 40க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. மண்டபத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 312 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
கமுதியில் 3 வீடுகள் பலத்த மழைக்கு இடிந்து விழுந்தன. மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகாமல் உள்ளனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது.
தூத்துக்குடியில் ..
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு புதிதாக போடப்பட்டு வரும் தங்க நாற்கர சாலை சேதமடைந்தது. கோவில்பட்டி - கயத்தாறு இடையே தங்க நாற்கர சாலை போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலத்த மழை பெய்து தண்ணீர் வெள்ளம் போல ஓடியதால், கயத்தாறு அருகே சாலையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
இதேபோல விளாத்திகுளம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில், 15 கண் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
இதேபோல ஈரோடு, கடலூர், திருச்சி,லால்குடி, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் லேசான தூறல் காணப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது வெயிலும், காற்றும் மாறி மாறி இருப்பதால் சென்னை நகர வானிலை படு குழப்பமாக உள்ளது.
மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை இதுவரை 4 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நான்கு மீனவர்கள் மாயம்- வீடு இடிந்து 5 பேர் காயம்:
வட கிழக்குப் பருவ மழை காவிரி டெல்டா மாவட்டங்களை விளாசிக் கொண்டிருக்கும் நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஐந்து நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர். இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் நான்கு மீனவர்களின் குடும்பத்தினரும், பிற மீனவர்களும் கவலையுடன் உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் மழைக்கு வீடு இடிந்து 3 பேர் காயமடைந்தனர். மட்டூர் கிராமத்தில் 2 பேர் காயமடைந்தனர். ஐந்து பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சீர்காழியில் அதிக அளவாக 231 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடத்தில் 197 மில்லிமீட்டர், நாகையில் 164 மில்லிமீட்டர், தஞ்சையில் 111 மில்லி மீட்டர், மாயவரத்தில் 100 மில்லி மீட்டர், நீடாமங்கலத்தில் 100 மில்லி மீட்டர், கீழ் அணைக்கட்டில் 107 மில்லிமீட்டர், திருத்துறைப்பூண்டியில் 145 மில்லிமீட்டர், திருவாரூரில் 101 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பெரும் கவலையில் விவசாயிகள்:
காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
மழையால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து மழை நிற்காமல் பெய்து வருவதால் பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயத்திற்குப் போக உபரி நீரை வெளியேற்ற வெட்டப்பட்டுள்ள கால்வாய்களில் மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் 75 சதவீதம் வளர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நடவுக்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில்தான் மழை வந்து அதை தடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications