குழந்தையைப் பறித்து மனநலமற்ற வாலிபர் ரகளை
மார்த்தாண்டம் (கன்னியாகுமரி): கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ரயிலில் இருந்து குதித்து சர்ச்சுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடமிருந்து குழந்தையை பறித்து ரகளை செயததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை திருநகரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு நாகராஜன் என்ற மகன் இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சையளிக்க இவரது தந்தை, சித்தப்பா கந்தசாமி மற்றும் உறவினர்கள் தர்மராஜ், முருகன் ஆகியோருடன் ரயில் மூலம் திருவனந்தபுரம் சென்றனர்.
ரயில் குழித்துறை அருகே உள்ள பல்லன்விளை என்ற இடத்தின் அருகே வரும்போது மெதுவாக சென்றது. அப்போது நாகராஜன் திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்து ஓடினார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் திடுக்கிட்டனர்.
நாகராஜனை பிடிக்க உறவினர்கள் முயன்றபோது ரயிலின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் குழித்துறை ஸ்டேஷனில் இறங்கி நாகராஜனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாகராஜன் வெட்டுவெந்தி பகுதியிலுள்ள குருசடி சர்ச்சுக்கு சென்றார். அங்கு பெண்கள் ஜெபம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த லால்மேரி என்பவரின் மகன் காட்வின் என்ற 3 வயது சிறுவனை நாகராஜன் திடீரென தூக்கி கொண்டு ஓடினார். இதனால் லால் மேரி அலறினார்.
சர்ச்சில் இருந்த மற்றவர்கள் நாகராஜனை விரட்டி சென்றனர். நீண்ட தூரம் விரட்டிச் சென்ற பின்னர் நாகராஜனை பிடித்தனர். குழந்தையை அவரிடமிருந்து மீட்டனர்.
பின்னர் நாகராஜனை குழித்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நாகராஜனின் முன்னுக்கு பின் முரணான பதிலால் குழப்பமடைந்து அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
காணாமல் போன நாகராஜனை தேடி வந்த அவரது உறவினர்கள் குழித்துறை போலீசிடம் புகார் செய்தனர். தாங்கள் விரட்டி விட்ட நபர்தான் நாகராஜன் என்பதை புரிந்து கொண்ட போலீசார் அவரை தேட தொடங்கினர்.
இந்நிலையில் ஒரு கடையிலிருந்து போலீசாருக்கு தொலைபேசியில் பேசிய நபர் அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் கலாட்டா செய்வதாக கூறினார். இதையடுத்து குழித்துறை போலீசார் அங்கு சென்று நாகராஜனை மடக்கி பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications