உருவானது சேலம் ரயில் கோட்டம்!
சேலம்: பெரியார் பரிந்துரைத்த சேலம் ரயில் கோட்டம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நனவாகிறது. புதிய சேலம் ரயில் கோட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கிய நகரம் சேலம். மாங்கனி நகரம் என்ற பெருமையும் சேலத்திற்கு உண்டு.
கொங்கு மண்டலத்தின் முக்கிய வணிக நகரங்களில் சேலமும் ஒன்று. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சேலம் நகரில் தனியாக ஒரு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக பல்வேறு காலகட்டங்களில் தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் பெரியார். 1952ம் ஆண்டு சேலம், சூரமங்கலத்திலே நடந்த மாநாட்டில் பெரியார் பேசுகையில் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனியாக ஒரு ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தப் பிராந்தியம் வளர முடியும், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என அவர் கோரினார்.
அன்று முதல் சேலம் ரயில் கோட்டம் தொடர்பான கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் அமைப்புகள், ெபாதுமக்கள் என அனைத்துத் தரப்பினருமே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
அந்தக் கால கட்டத்தில், தமிழகத்தின் மதிப்பு மத்தியில் உள்ள அரசுகளுக்குத் தெரியவில்லை. தேவையும் ஏற்படாமல் இருந்த கால கட்டம் அது.
ஆனால் மத்தியில் கூட்டணி அரசுகள் அமைய ஆரம்பித்த பின்னர், தமிழக எம்.பிக்களின் மதிப்பு மத்தியில் அமைந்த அரசுகளுக்குப் புரிய ஆரம்பித்த பின்னர் சேலம் ரயில் கோட்டம் குறித்த கோரிக்கையை மத்தியில் இருந்து வந்த அரசுகள் பரிசீலிக்க ஆரம்பித்தன.
இருப்பினும் இந்த முறை கேரளத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தது. பாலக்காடு கோட்டத்தைப் பிரிக்கக் கூடாது, சேலம் கோட்டம் அமைக்க்க கூடாது என்று அங்கு கோரிக்கைகள் கிளம்பின.
இந்த நிலையில் பிரச்சினையை பாமக கையில் எடுத்தது. பாமக சார்பில் மத்திய ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பேற்ற ஆர்.வேலு துரிதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சேலம் கோட்டத்தை உருவாக்க கடுமையாக முயன்றார். அவரது முயற்சிகளுக்கு தமிழகத்திலும் ஆதரவு கிடைத்தது.
தமிழகத் தரப்பில் ரயில் கோட்ட முயற்சிகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து கேரளா தனது லாபியை ஆரம்பித்தது. டெல்லியில் நெருக்கடியை அதிகரித்தனர். இதனால் சேலம் ரயில் கோட்டம் உருவாவதில் பல சிக்கல்கள், முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன.
பொறுத்தது போதும் கதையாக, சேலம் கோட்டத்தை வலியுறுத்தி தமிழகம் கொந்தளித்தது. கேரளாவுக்குச் செல்லும் ரயில்கள் மறிக்கப்பட்டன. இதனால் கேரளாவில் அதிர்ச்சி எழுந்தது.
இப்படியாக பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகள், சதிச் செயல்களைத் தாண்டி ஒரு வழியாக சேலம் ரயில் கோட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ரயில் கோட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
அதன்படி சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மண்டலங்களை இணைத்ததாக சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டம் ரயில்வே வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட 7 மாதங்களில் கோட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை இத்தனை குறுகிய காலத்தில் ஒரு ரயில் கோட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்ததில்லை.
மேலும், இந்தியாவில் வேறு எந்தக் கோட்டத்திலும் இல்லாத வகையில், சேலம் ரயில்வே கோட்டம் முற்றிலும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சேலம் ரயில்வே காலனி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி சேலம் ரயில் கோட்டத்தைத் தொடங்கி வைத்தார். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலை வகித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
புதிய ரயில்வே கோட்டம் தொடங்கப்படுவதையொட்டி சேலம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு கட்சிகளின் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் என அமர்க்களப்பட்டது.












Click it and Unblock the Notifications